விடிஞ்சா கல்யாணம்..!! போலீஸ் ஸ்டேஷனில் மணமகன்..!! விசாரணையில் வெளிவந்த பல திடுக்கிடும் தகவல்கள்..!!
அலைபாயுதே திரைப்படம் பாணியில் முதல் திருமணத்தை வீட்டிற்கு தெரியாமல் செய்து இரண்டாவது திருமணத்திற்கு சம்மதித்த மணமகன். இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் முதல் மனைவி புகார் சேர்ந்து வாழ சொல்லி போலீஸ் அனுப்பி வைத்தது புது மணப்பெண் வீட்டார் மாப்பிள்ளை மீது நடவடிக்கை எடுக்க புகார்…
திருவள்ளூர் அடுத்த கொப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார் என்கிற ஷாம் (31). இவர் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கும் திருவள்ளூர் அடுத்த சேலை கிராமத்தைச் சேர்ந்த சலோமி பெயர் மாற்றப்பட்டுள்ளது என்கிற (26) பெண்ணுக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் பெண் வீட்டார் சார்பில் நிச்சயதார்த்தம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் நேற்று 15-ஆம் தேதி காலை திருமண சடங்கிற்காக பெண் வீட்டார் மணமகன் வீட்டாரை தொடர்பு கொண்ட போது யாரும் போனில் பேசாததால் நேரில் சென்று பார்த்துள்ளனர். வீடு பூட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தில் விசாரித்த போது உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு சென்று இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் சந்தேகமாக இருப்பதால் மணமகள் வீட்டார் தீவிரமாக விசாரணை செய்ததில் இவர்கள் அனைவரும் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது சரத்குமார் என்கிற ஷாம் ஏற்கனவே அவர் வசிக்கும் பகுதியில் உள்ள பவித்ரா என்ற பெண்ணை அலைபாயுதே சினிமா பாணியில் வீட்டாருக்கு தெரியாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து இருவரும் தனித்தனியே அவரவர்கள் வீட்டில் வாழ்ந்து வந்தது தெரிந்தது.
மேலும் திருமணம் நிச்சயக்கப்பட்டு இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் நேற்று பவித்ரா திருவள்ளூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து மீண்டும் பவித்ராவுடன் சேர்ந்து வாழ சரத்குமார் என்கிற ஷாம் ஒப்புக்கொண்டதால் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த புது மணப்பெண்ணின் வீட்டார் தரப்பில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். லட்சக்கணக்கில் செலவு செய்து திருமண ஏற்பாடு செய்த நிலையில் ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சேலை மற்றும் கொப்பூர் ஆகிய இரண்டு கிராமங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.