வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பணியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மேற்கொள்வார் என அக்கட்சியின் தலைமை கழக செயலாளர் துரை வைகோ தெரிவித்தார்.
நெல்லையில் மதிமுக நிர்வாகி செல்வகோபால் என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த நிலையில் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ அவரது இல்லத்திற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ , ராகுல் காந்தி ஒற்றுமை நடைபயணத்தில் எழுச்சி ஏற்பட்டுள்ளதாகவும் மதவாத சக்தியான பாஜகவை முழு பலத்துடன் எதிர்க்க காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை நன்றாக உருவாக்க வேண்டும் என ராகுல் காந்தியிடம் நேரில் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
தொடந்து பேசிய துரை வைகோ , வரும் 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக மதவாத சக்தி பாஜகவை முழு பலத்துடன் எதிர்க்க அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பணியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிச்சயம் மேற்கொள்வார் என்று தெரிவித்தார் தனது கடமைகளை விட்டுவிட்டு தேவையில்லாத செயல்களிலேயே தமிழக ஆளுநர் செயல்படுவதாகவும் துரை வைகோ சாடினார்.