கேரளா மாநில அரசு முயற்சிக்கு வைகோ கண்டனம்..!
முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு, புதிய அணை கட்டும் கேரளா மாநில அரசு முயற்சிக்கு மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. கேரளா மாநில அரசு முல்லை பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையை தயார் செய்ய ஒன்றிய அரசின் மதிப்பீட்டு குழுவின் பரிசீலனைக்காக பட்டியலிடப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக வைகோ குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்காமல், கேரள மாநில அரசு புதிய அணை கட்டுவதற்கு ஆய்வுகள் மேற்கொள்வதும், திட்ட அறிக்கையை தயாரித்து உள்ளதும் கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ள வைகோ, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரளா அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, கேரளா மாநில அரசின் திட்டத்தை தமிழ்நாடு அரசு முறியடிக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.