உக்ரைன் தலைநகர் கீவில் இந்திய மாணவர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளதாக ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து 9வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையில், ஆப்ரேசன் கங்கா திட்டத்தின் மூலம் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை அண்டை நாடுகள் வழியாக அழைத்து வரப்படுகின்றனர்.
இந்நிலையில், உக்ரைனின் கீவ் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச்சுட்டில் இந்திய மாணவர் ஒருவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்துள்ளார்.
கீவில் ஹர்ஜோத்சிங் என்ற இந்திய மாணவர், காரில் பயணம் செய்துக் கொண்டிருந்த போது அங்கு நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அவர் மீது குண்டு பாய்ந்துள்ளது. காயமடைந்த அந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தன்னை இந்தியா அழைத்துச்செல்ல கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் இணை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் உறுதிப்படுத்தியுள்ளார்.