உக்ரைனில் இருந்து வரும் இந்தியர்கள் தங்கள் வளர்ப்பு பிராணிகளுடன் வர மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ரஷ்யா உக்ரைன் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவில் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைன் கார்கிவ் பகுதியில் உள்ள இந்திய மாணவர்கள் மற்றும் இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் வெளியேறிய பின்னர் 3 குறிப்பிட்ட பகுதிகளுக்கு வர வேண்டும் என்றும் உக்ரைனில் உள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று(மார்ச் 02) அவசர அறிக்கை வெளியிட்டிருந்தது.
இதற்கிடையில், உக்ரைனில் இருந்து வரும் இந்தியர்கள் தங்கள் வளர்ப்பு பிராணிகளை உடன் அழைத்து வருகின்றனர். முன்னதாக, உக்ரைனில் படித்து வரும் ரிஷப் கௌஷிக் என்ற இந்திய மாணவர், தான் வளர்த்து வரும் நாயை விட்டு அங்கிருந்து வெளியேற மறுத்துவிட்டார். மேலும் நாயுடன் இந்தியா வர உதவிடுமாறு சமூக வலைத்தளங்களில் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில், உக்ரைனில் இருந்து வரும் இந்தியர்கள் தங்கள் வளர்ப்பு பிராணிகளை கொண்டு வரும் வகையில் விதிகளை மத்திய அரசு தளர்த்தியது. இதனை தொடர்ந்தது, நேற்று(மார்ச்.02) இந்திய விமானப்படை விமானம் மூலம் தாயகம் வந்த மாணவர்கள் தங்கள் செல்ல நாய்களுடன் விமான நிலையத்திலிருந்து வெளியே வரும் காட்சியை விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.