பல சோதனைகளை கடந்து – சாதித்த திருநங்கை..!ஊரும் உறவும்-5
ஆண், பெண் என்று ஒரு அடையாளம் இருப்பதைப்போல மூன்றாம் பாலினத்தர் என்று திருங்கையர் களுக்கும் ஒரு அடையாளம் உண்டு.கடந்த சில ஆண்டுகளாக திருநங்கைகள் சாதனைகள் பற்றி கேட்டால், பட்டியலிட்டு சொல்லாம்.
அந்த சாதனைக்கு பின் அவர்கள் பார்த்த அவமானங்கள், கஷ்டங்கள் என்னவென்று நமக்கு புரியாது, அது அவர்களிடம் சென்று கேட்டால் மட்டும் தான் நமக்கு தெரியும். அப்படி நான் சென்று சந்தித்த திருநங்கை தான் “மீரா”.
சொந்தமாக உணவகம், சொந்த உழைப்பில் வீடு, கோவில், இவருக்கென்று ஒரு சுயதொழில் அதில் குடும்பமாக இவரை போன்ற பல திருநங்கையர்கள் வசித்து வருகின்றனர். அவரிடம் சென்று பேசியபோது.
நான் திருநங்கையாராக இருப்பதை நினைத்து மிகவும் சந்தோஷப்படுகின்றேன் ஆனால் ஒரு சிலர் எங்களை ஏளனமாக பார்க்கிறார்கள், அதை எல்லாம் பார்க்கும் பொழுது மனதிற்குள் நினைத்து அலுவதுண்டு. ஆனால் அழுதுகொண்டே இருந்தால் ஒரு பயனும் இல்லை என நினைத்து என் தொழிலை தொடங்கி விடுவேன்.
நான் திருநங்கையாரக இருந்தது என் பெற்றோருக்கு பிடிக்கவில்லை, என்னை அடித்து வீட்டை விட்டு வெளியே துரத்திவிட்டார்கள். 12 வயதில் வீட்டை விட்டு வெளியேறினேன். பசி பசி என்று அனைவரிடம் கை ஏந்தினேன் ஆனால் ஒரு சிலர் மட்டுமே உணவு கொடுத்து உதவினார்கள்.
கோவிலுக்கு உள்ளே கூட எங்களை விட மாட்டார்கள், நான் சென்றால் என்னை பிரம்பால் அடித்து துரத்துவார்கள், ஒரு சில திருநங்கையர்கள் கை நீட்டி காசு கேட்பதை நான் பார்த்தேன், அதுபோல் நாமும் செய்யக் கூடாது என நினைத்தேன்.
பசி என்று கேட்ட பொழுது யாரும் உதவவில்லை.., நம்மை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என நினைத்து, கிடைத்த வேலையை செய்தேன், தெருவில் குப்பை, பிளாஸ்டிக் பொருக்குவது, அதை கடையில் போட்டு காசு சேர்த்து 5 வருடத்திற்கு பின் ஒரு தள்ளு வண்டி கடையை தொடங்கினேன்.
அதையும் ஒரு சிலர் என்னை செய்ய விடவில்லை, வீடு இல்லாமல் தெருவில் தான் உறங்குவேன், ஆனால் ஒரு முறை, சில குடிகார கும்பல் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர், பாதுகாப்பு இல்லாததால் ஒரு வீடு வாடகைக்கு எடுத்தேன்.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு.., இந்த தள்ளுவண்டி கடை ஒரு உணவாகமாக மாறியது, நான் அனுபவித்த கொடுமைகளை மற்றவர்கள் அனுபவிக்க கூடாது என நினைத்து, என்னை போன்ற வீட்டை விட்டு வெளியேறிய திருநங்கையர்களுக்கு அடைக்கலம் கொடுத்தேன்.
எங்கள் அனைவரின் உழைப்பும் தான், இன்று சொந்த வீடு, கோவில் கட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. மற்ற திருநங்கையர்களுக்கு நான் சொல்ல இருப்பது ஒன்று மட்டும் தான், உங்களிடம் உள்ள திறமையை நீங்கள் தான் வெளிப்படுத்த வேண்டும்.
மற்றவர்கள் பேசும் பேச்சை நினைத்து கவலை கொண்டால், நாம் இலக்கை நம்மால் அடைய முடியாது என கூறினார்.
-வெ.லோகேஸ்வரி