சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதைத் தடுக்கவும், சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஓ.பன்னீர்செல்வம் வலிறுத்தியுள்ளார்.
முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:-
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செப்.1 முதல் சுங்கக் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.
இந்தியா முழுவதும் 800-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருந்து வரும் நிலையில் கிட்டத்தட்ட 600 சுங்கச்சாவடிகள் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் 48 சுங்கச்சாவடிகள் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சுங்கச்சாவடிகள் மூலம் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்திக் கொண்டு வருவதை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாடிக்கையாகக் கொண்டுள்ளது,
அந்த வகையில், இந்த ஆண்டு ஏற்கெனவே ஏப்ரல் மாதம் முதல் சுங்கக் கட்டணத்தை உயர்த்திய நிலையில், தற்போது செப்டம்பர் மாதம் முதல் தமிழகத்தில் உள்ள 28 சுங்கச் சாவடிகளுக்கு கட்டணத்தை உயர்த்த உள்ளதாக செய்தி பேரதிர்ச்சியை அளித்துள்ளது. இதன்படி காரம் வேன், ஜீப்புகளுக்கு ரூ.150 வரை உயர்த்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே சாலைகள் பராமரிப்பு இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிற நிலையில், சுங்கச்சாவடிகள் மூடப்பட வேண்டும் என்ற கருத்து ஓங்கி ஒழித்துக் கொண்டிருக்கின்ற இந்தத் தருணத்தில், சுங்கக் கட்டணத்தை உயர்த்திருப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல என தெரிவித்துள்ளார்.
எனவே உயர்த்தப்படவுள்ள சுங்கக் கட்டணத்தை தடுத்து நிறுத்தவும், விதிகளுக்கு ஏற்ப சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்கவும் நடவடிக்கை எடுத்து, ஏழையெளிய மக்கள் உள்ளிட்ட அனைவரின் நலனையும் காக்க வேண்டுமென்று கழகத்தின் சார்பில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தையும், திமுக அரசையும் வலியுறுத்தியுள்ளார்.