கிருஷ்ணகிரி ஆணவ கொலை தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
கடந்த இருதினங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரியில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜெகன் என்ற டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி பெண்ணின் தந்தையால் பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், பெண்ணின் தந்தை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டபேரவையில் கவன ஈர்ப்பு கொண்டு வந்தார்.
பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக்கொலை நடந்துள்ளது; இதற்கு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், கிருஷ்ணகிரி கிட்டாம்பட்டியை சேர்ந்த அதிமுக கிளை செயலாளர் சங்கர் உள்ளிட்ட மூவர் ஆயுதங்களால் தாக்கியத்தில் ஜெகன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். சங்கரின் மகள் சரண்யாவை கோவையில் வைத்து திருமணம் செய்ததால் கொலை செய்ததாக தெரிகிறது.
சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளார். சமூக நீதி மண்ணான தமிழகத்தில் இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மனித நேய அடிப்படையில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.
ஆணவக்கொலையில் அதிமுக கிளைச்செயலாளருக்கு தொடர்பு என முதல்வர் கூறியதற்கு எதிராக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.