மோடியை அவதூறாக விமர்சித்த வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கிற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்…
2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, கர்நாடகா மாநிலம் கோலாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, ‘எல்லா திருடர்களும் மோடியை எப்படி பொதுவான குடும்பப்பெயராக வைத்திருக்கிறார்கள்’ என பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
பிரதமர் மோடியின் குடும்ப பெயரை கொச்சைப்படுத்தும் விதமாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியதற்கு எதிராக குஜராத் முன்னாள் அமைச்சரும், பாஜக எம்எல்ஏவுமான பூர்ணேஷ் மோடி புகார் அளித்திருந்தார்.
இதனடிப்படையில் 2019ம் ஆண்டு ராகுல் காந்தி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கடந்த 4 ஆண்டுகளாக சூரத் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம் கடந்த வாரம், இந்த வழக்கில் மார்ச் 23ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என அறிவித்தது.
சட்டப்பிரிவு 499 மற்றும் 500-யின் கீழ் பிரதமர் மோடியின் குடும்ப பெயரை கொச்சைப்படுத்தி அவதூறு பரப்பியதாக ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில், அவரை குற்றவாளி என சூரத் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேலும் இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ள நீதிமன்றம், அவர் 30 நாட்களில் மேல்முறையீடு செய்ய காலஅவகாசம் வழங்கியுள்ளது. மேலும் அவர் மேல்முறையீடு செய்ய ஏதுவாக பிணை வழங்கியும் உத்தரவிட்டுள்ளது. ரூ.15,000 பிணைத்தொகை செலுத்தி ஜாமின் பெற்றுக்கொள்ள ராகுல் காந்திக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக ராகுல் காந்தி, கடைசியாக 2021 அக்டோபரில் சூரத் நீதிமன்றத்தில் ஆஜரானது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post