ஆந்திராவில் நீர்த்தேக்கத்தில் படகு சுற்றுலா சென்ற போது படகு கவிழ்ந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டத்தில் உள்ள அவக்கு நீர்தேக்கத்தில் படகு சவாரி செல்ல சிறப்புப் பிரிவு காவலராகப் பணிபுரியும் ரசூலின் குடும்பத்தினர் 11 பேர் இன்று வந்தனர்.குடும்பத்தினருடன் அனைவரும் மகிழ்ச்சியாக சுற்றுலாத்துறை படகில் ஏறி நீர்த்தேக்கத்தை சுற்றி பார்க்க சென்றனர். திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் படகில் பயணம் செய்த ரசூலின் குடும்பத்தினர் ஷேக் ஆஷாபி(18), சஜிதா(21), நூர்ஜஹான் ஆகியோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களது உடல்களை அப்பகுதி மக்கள் மீட்டனர். மீதமுள்ளவர்களை அப்பகுதி பொது மக்கள் மீனவர்கள் சுற்றுலாத்துறை அதிகாரிகள் இணைந்து காப்பாற்றினர்.
இறந்தவர்களில் நூர்ஜான் நந்தியாலில் அரசு ஆசிரியையாக பணியாற்றியது தெரிய வந்துள்ளது. தங்கள் கண் முன்னே குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியாக ஆடி பாடி கொண்டு படகில் நீர்த்தேக்கத்தை ரசித்து வந்த நிலையில் திடீரென படகு கவிழ்ந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததால் ரசூலின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க அலறித் துடித்தனர்.
இந்த விபத்திற்கு காரணம் படகில் இருந்தவர்கள் யாரும் பாதுகாப்பு கவசம் அணியாதது உயிரிழப்புக்கு காரணம் என தெரிய வந்துள்ளது. சுற்றுலாத்துறை அதிகாரிகள் படகில் செல்லும் அனைவருக்கும் பாதுகாப்பு கவசம் வழங்கி பயணத்தை தொடங்கி இருந்தால் இவ்வாறு உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது என தெரிவித்துள்ளனர். இது குறித்து நந்தியால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post