அந்த புனிதப் பாத்திரம் சொல்லாமல் சொன்ன நிகழ்வு இது..? மஹாபெரியவா ஆன்மீக கதை -20
கூட்டத்தை விட்டு தள்ளி ஒடுங்கி நின்றவளின் பார்வை மட்டும் தாக்குர்ஜி இருந்த இடத்தை விட்டு விலகாது இருந்தது.
சுமார் ஐந்து மணி நேரம் காத்திருந்தவளுக்கு இன்னும் மஹா பெரியவாளின் தூர தரிசனம் கிடைக்கவில்லை. ஆனால் மஹா பெரியவா அவளைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தார் – உள் முகமாக. அருகே இருந்த தன் உதவியாளரை அழைத்தார். சில குறிப்புகள் சொல்லி அவளிடம் இருக்கும் பாத்திரத்தை வாங்கி வரும் படி சொன்னார்.
உதவியாளரிடம் பாத்திரத்தை தந்தவளின் கண்கள் தாக்குர்ஜியை காணத் துடித்தது. தாக்குர்ஜி என்னை உள்முகமாக பார்த்துவிட்டார். எனக்கு அவரின் தரிசின பாக்கியம் கிடைக்குமா என உள்ளம் ஏங்கியது. உதவியாளார் சென்ற பாதையிலேயே தன் கண் பார்வையை செலுத்தினாள். உதவியாளர் சென்ற பொழுது ஒரு இடைவெளி கிடைக்க அந்த இடைவெளியில் தாக்குர்ஜியைப் பார்த்தாள். பரவசப்பட்டாள். கை தொழுது நின்றவளின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.
தாகுர்ஜியின் முன் பாத்திரம் வைக்கப் பட அதில் மஹாபெரியவா தன் கமண்டத்திலிருந்து நீரை ஊற்றுவதைக் கண்டாள். கூட்டம் மறைக்க இந்த தரிசினமே போதுமானது என திருப்தி அடைந்தாள். உதவியாளர் கொண்டு வந்து தந்த பாத்திரத்தைத் தன் சேலைத் தலைப்பில் மடிப் பிச்சையாக வாங்கிக் கொண்டாள். அதை பவித்திரமாக பாவித்து தன்னுடன் அணைத்துக் கொண்டு கண்ணீர் மல்க நன்றி சொன்னாள். அவள் உடலும் உள்ளமும் ஆனந்தப் பரவசப் பட கால்கள் சிறிது தள்ளாட அருகே இருந்த சுவரில் சாய்ந்தாள்.
கண்கள் மூடிய பரவச நிலையில் இருந்தவளுக்கு மஹாபெரியவாளின் வார்த்தைகள் இடி முழக்கமாக கேட்டது. “பரவாயில்லை இத்தனை நேரம் காத்திருந்தாயே. உண்மையில் நீ மிகவும் பொறுமைசாலி” என சொல்ல, அந்தப் பெண், “ தாக்குர்ஜி நான் பொறுமைசாலியல்ல. எத்தனையோ மக்கள் தங்களிடம் ஆசி பெறவும் அனுக்ரஹம் பெறவும் காத்திருக்க, வந்த அனைவருக்கும் பல மணி நேரமாக இடை விடாது ஆசி தந்து கருணை மழை பொழிந்துக் கொண்டிருப்பதோடு எங்கோ நின்று கொண்டிருந்த இந்த விதவைக்கும் அல்லவா அனுக்ரஹம் காட்டினீர்.
என் காத்திருப்பில் சுய நலம் இருக்கிறது. ஆனால் தங்களை நாடி வந்த பக்தர்களின் நலம் கருதிய தங்களின் பொறுமையிலோ அன்பும் கருணையும் அல்லவா வழிந்துக் கொண்டிருக்கிறது. நான் பொறுமைசாலி அல்ல. தாங்கள் தான் பொறுமையின் பிறப்பிடமும் அதிபதியும்” என்றாள்.
“அம்மா உன் நிலை அறிவேன். இதைக் கொண்டு 17 ஆண்டுக் காலம் உன் குடும்பத்தை நடத்தி நீயும் ஜீவித்து வா. இதுவே உன் வாழ்வாதாரம். துளிர்த்து தழைக்கும்” என ஆசி வழங்கினார்.
பரவச நிலையிலிருந்து வெளி வந்து சம நிலை அடைந்தாள். தாகுர்ஜியின் திசை நோக்கி மீண்டும் நன்றியோடு வணங்கினாள். பாத்திரத்தை இறுக்கி பிடித்தபடி தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
மனதில் தாக்குர்ஜியின் தரிசனமும் அவரின் வார்த்தைகளுமே வியாபித்திருந்தது. ஐந்து கிலோமீட்டருக்கும் மேலான நடை பயணம் களைப்பைத் தரவில்லை. பரவச நிலைக்குப் பின் உலகமே அவளுக்கு புதிதாகத் தோன்றியது. மனதை அழுத்திக் கொண்டிருந்த பாராமும் – பிறர் சூட்டிய பட்டங்களும் – கவலையும் போன இடம் தெரியவில்லை. தாகுர்ஜியின் தரிசனம் கிடைத்துவிட்டது.
அவரின் ஆசி வார்தைகளையும் கேட்டு விட்டேன் . இனி தாக்குர்ஜியின் ஆசியே என் குடும்பத்தை வழி நடத்தும் என திடம் கொண்டாள். ஒரு வழியாக தாக்குர்ஜியை தரிசித்த மகிழ்வுடன் வீடு வந்து சேர்ந்தாள்.
தான் கொண்டு சென்ற பாத்திரத்தில் தாக்குர்ஜி ப்ரசாதமாக கொடுத்த நீர் , பாத்திரம் முழுதுமாக சுமார் ஒன்றரை லிட்டர் நிரம்பி இருக்க, அதை வேறு பாத்திரத்தில் நிரப்ப நினைத்து மற்றொரு பாத்திரத்தில் ஊற்றினாள். ஊற்றிய பொழுது நடந்த அதிசயத்தை அவள் கண்களால் நம்ப முடியவில்லை.
அவள் கொண்டு சென்ற பாத்திரத்திலிருந்தது ப்ரசாத நீர். ஆனால் அதை மற்றொரு பாத்திரத்தில் நிரப்பிய பொழுது அது எண்ணெய்யாக வழிந்தது. வழிந்துக் கொண்டே இருந்தது. நடக்கும் ஆச்சர்யத்தை அவளால் நம்ப முடியவில்லை. தாக்குர்ஜி ப்ரசாதமாக தந்தது நீர் தானா என பார்த்தாள். நீர் தான் இருந்தது.
அது எப்படி வழியும் பொழுது எண்ணெய் ஆயிற்று? தாக்குர்ஜி தாகுர்ஜி என வாய் முணுமுணுத்தது. உள்ளம் ஆச்சர்யத்திலும் சந்தோஷத்திலும் திளைத்திருக்க , மஹா பெரியவாளின் ஆசி வார்த்தைகள் அவள் மனதில் மோதின. “இதைக் கொண்டு 17 ஆண்டுக் காலம் உன் குடும்பத்தை நடத்தி நீயும் ஜீவித்து வா. இதுவே உன் வாழ்வாதாரம். துளிர்த்து தழைக்கும்” ஆசி வார்த்தைகளின் அர்த்தம் இப்பொழுது புரிய ஆரம்பித்தது.
பட்டுப் போன குலத்தொழிலான எண்ணெய் வியாபாரத்தை தாக்குர்ஜி மீண்டும் துளிர்க்க வைத்துவிட்டார் எனப் புரிந்துக் கொண்டாள். இனி இந்த எண்ணெய்யை விற்று குடும்பத்தை நடத்துவது என முடிவு செய்தாள்.
– வீர பெருமாள் வீர விநாயகம்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..