மது அருந்திவிட்டு போதையில் தினமும் டார்ச்சர் செய்து வந்த கணவரின் முகத்தில் மிளகாய் பொடி தூவி, மனைவி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது.
தேனி மாவட்டம் பாலகோம்பை அருகே ராயவேலூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல் (37). இவரது மனைவி அழகு சின்னு (31). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவி என இருவரும் கூலி வேலை பார்த்து வந்தனர்.
மதுப்பழக்கம் உள்ள சண்முகவேல் நாள்தோறும் குடித்துவிட்டு, மனைவி அழகுசின்னுவிடம் டார்ச்சர் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த இரு நாள்களுக்கு முன்பு அவரிடம் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அழகுசின்னு சமையல் அறையில் இருந்து மிளகாய் பொடி எடுத்து சண்முகவேல் முகத்தில் தூவியுள்ளார். இதனால் எரிச்சல் ஏற்பட்டு அவர் வலியால் துடித்துள்ளார்.
பின்னர் அரிவாள் எடுத்து சண்முகவேல் கை, கால், தலை ஆகிய பகுதிகளில் அவர் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த சண்முகவேல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சண்முகவேல் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக தேனி அரசு மருத்துவமனை கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். சண்முகவேலை குத்தி கொலை செய்த அவரது மனைவி அழகுசின்னு கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், “கொலை செய்யப்பட்ட சண்முகவேல், அழகுசின்னு ஆகியோருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். உறவினர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சேர்ந்துள்ளனர்.
மதுபழக்கம் கொண்ட சண்முகவேல் குடித்துவிட்டு போதையில் அழகுசின்னுவிடம் அடிக்கடி தகராறு செய்து டார்ச்சர் செய்துள்ளார். இதனால் அவருடன் வாழ பிடிக்காத அழகுசின்னு, கணவரை தீர்த்துகட்ட முடிவு செய்துள்ளார்.கடந்த இரு நாள்களுக்கு முன் வழக்கம்போல் குடித்துவிட்டு தகராறு செய்த கணவர் மீது மிளகாய் பொடியை தூவி அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார்” என தெரியவந்துள்ளது.