உத்திரப்பிரதேசத்தில் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாக கருதப்படும் தாதா ராஜா பையாவை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து வணங்கிய சம்பவம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் ரஜினி தனது ‘ஜெயிலர்’ படம் வெளியான பிறகு இமயமலைக்கு சென்றார். இப்பயணத்தை தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலம் வந்த அவர், அதன் பிறகு கடந்த வெள்ளிக்கிழமை உ.பி. வந்தார்.ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார். துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவுடன் ‘ஜெயிலர்’ சிறப்புக் காட்சியை பார்த்தார். மறுநாள், உ.பி. எதிர்க்கட்சியான சமாஜ்வாதியின் தலைவர் அகிலேஷ் சிங் யாதவை சந்தித்த அவர், அயோத்திக்கும் சென்று வந்தார்.
இந்நிலையில், ரஜினி நேற்று திடீரென உ.பி.யின் சர்ச்சைக்குரிய அரசியல்வாதி என்று கூறப்படும் ராஜா பைய்யா எனும் ரகுராஜ் பிரதாப் சிங்கை (53) சந்தித்தார். இவர் சுயேச்சையாக இருந்தாலும் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அமைச்சராகி விடுவார். இவர் மீது ஐபிஎஸ் அதிகாரி கொலை வழக்கு முதல் பல கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளன. இவர் ஏற்கனவே மாயாவதி ஆட்சியில் இருந்த போது பாஜக எம்எல்ஏ ஒருவரை கடத்தி, மாயாவதி மூலம் கைது செய்யப்பட்டார். தீவிரவாத தடுப்பு நடவடிக்கையின் கீழ் இவர் கைது செய்யப்பட்டார்.முலாயம் சிங் ஆட்சிக்கு வந்த 25 நிமிடத்தில் இவர் மீதான குற்றங்கள் நீக்கப்பட்டு விடுதலையும் செய்யப்பட்டார். அதன்பின் இவரின் வீட்டில் முன்னதாக ரெய்டு நடத்தி இவரை கைது செய்த ஐபிஎஸ் அதிகாரி ஆர்எஸ் பாண்டே விபத்தில் மர்மமாக பலியானார். இவரை கொன்றது ராஜா பையாதான் என்றும் விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
இதனிடையே ரஜினி ராஜா பையா லக்னோவில் ராஜா பைய்யா வீட்டில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது ரஜினிக்கு காசி விஸ்வநாதர் கோயில் விபூதி, கங்கை தீர்த்தம் கொண்ட கலசம் உள்ளிட்ட புனிதப் பொருட்களை ராஜா பைய்யா வழங்கினார். அவருடன் சிறிது நேரம் உரையாடினார் ரஜினி.
இதனிடையே ராஜா பைய்யாவுடன் ரஜினியின் திடீர் சந்திப்பை எவரும் எதிர்பார்க்கவில்லை. இதனால், இதன் பின்னணியையும் ஊடகங்களால் கணிக்க முடியவில்லை.
இதுகுறித்து ரஜினியுடனான படத்துடன் ராஜா பைய்யா பதிவிட்ட ட்விட்டில், ‘சூப்பர் ஸ்டாருடனான இந்த சந்திப்பை, எனக்கு கிடைத்த பெரும் வாய்ப்பாகக் கருதி அவரை வரவேற்கிறேன். இந்நாட்டின் திரையுலகில் மட்டுமின்றி, ஆன்மிக உலகம் மற்றும் பக்தியிலும் அவர் ஒரு சூப்பர் நாயகர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post