உத்திர பிரதேசத்தை சேர்ந்த அஞ்சனி என்ற சிறுமி வனப்பகுதிக்குள் சென்ற நிலையில் அங்கே இருந்த புலி ஒன்று அவரை தாக்கி கொன்றுள்ளது. வனத்துறையினர் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் இது அந்த பகுதியில், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பஹ்ரைச் அடுத்த ஜிகானியா கிராமத்தைச் சேர்ந்த தோத்தாராம் சவுஹானின் என்பவரின் மகள் 12 வயதான அஞ்சனி என்பவர் வழக்கம் போல் ஆடு மேய்ப்பதற்காக அருகிலிருந்த சாக்கியா வனப்பகுதிக்குள் சென்றுள்ளார். ஆடுகளை கவனத்து கொண்டிருந்த அவர் சிறிது நேரம் கழித்து, அங்கிருந்த சரயு என்ற கால்வாயில் தண்ணீர் குடிப்பதற்காக சென்றுள்ளார். அந்நேரத்தில் அந்த பகுதியில் புலி ஒன்று சுற்றி திரிந்ததை கவனிக்காமல் அவர் அந்த கால்வாய் அருகில் சென்றுள்ளார்.
அப்போது தண்ணீர் அருந்த சென்றுள்ள அவரை அங்கிருந்த புலி தாக்கியுள்ளது. இந்த தாக்குதலால் அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பிறகு அந்த சிறுமியின் சடலத்தை அந்த புலி வனப்பகுதிக்குள் இழுத்து சென்றுள்ளது.இந்நிலையில் தகவலறிந்து வந்த வன துறையினர் அந்த சிறுமியின் உடலை கைப்பற்ற வனப்பகுதிக்குள் சென்றனர். அப்போது சம்பவம் நடந்த அந்த கால்வாயிலிருந்து சுமார் 700 மீட்டர்கள் தொலைவில் அந்த சிறுமியின் உடல் சிதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. பின்னர் வனத்துறையினர் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரி பிரதீப் சிங் கூறுகையில், ‘பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, இறந்த சிறுமியின் குடும்பத்திற்கு நிவாரண நிதியுதவி வழங்கப்படும்’ என்று கூறினார்.