வயநாடு நிலச்சரிவை முன்கூட்டியே உரிமையாளரிடம் எச்சரித்த கிளி…
கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 30ம் தேதி ஏற்பட்ட அதீத கனமழையின் விளைவாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு பல கிராமங்கள் நிலச்சரிவால் உருக்குலைந்துள்ளன. பல கிரமங்கள் இருந்த தடயமே இல்லாமல் அழிந்துள்ளது.
இந்த நிலச்சரிவில் சிக்கி 380க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் 7 நாட்களை கடந்தும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைப்பெற்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் நிலச்சரிவை முன் கூட்டியே கணித்த வளர்ப்பு கிளிகள் அதன் உரிமையாளர் உட்பட பல குடும்பங்களை காப்பாற்றியது பலரது கவனத்தை பெற்று வருகிறது.
அதாவது, முண்டக்கையின் காலனி சாலையில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு வினோத் என்பவர் குடும்பத்துடன் சென்றுள்ளார். அப்போது அவர்கள் தங்களது வளர்ப்பு கிளியான கிங்கினி கிளியையும் அழைத்துச் சென்றுள்ளனர். புதிய வீட்டிற்குச் சென்ற கிளிகள் முதல் நாள் எவ்வித சலசலப்பும் இன்றி சாதாரணமாக இருந்துள்ளன.
ஆனால் நிலச்சரிவு எற்பட்ட முன் தினம் கிளிகள் வழக்கத்திற்கு மாறாக கூண்டிற்குள் படபடவென தனது இறக்கைகளை அடித்து கொண்டு பறந்து கொண்டு அங்கும், இங்குமாக தாவிக் கொண்டு இருந்துள்ளன. இதனால் அசம்பாவிதத்தை முன்கூட்டியே உணர்ந்த கிளியின் உரிமையாளர் வினோத் தனது வீட்டின் வெளியில் சென்று பார்த்தபோது வீட்டை சுற்றி வெள்ளம் சூழ்ந்து இருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் தனது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் ,உறவினர்கள் என அனைவருக்கும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு இது குறித்து எச்சரித்துள்ளார்.
இதனார் அனைவரும் முன் தின இரவே வீடுகளை விட்டு வெளியேறி அங்குள்ள அரசு மேல்நிலை பள்ளையில் பாதுகாப்பாக சென்றுள்ளனர். பின்னர் மறு நாள் அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு கிரமத்தையே புரட்டி போட்டது. கிளிகளால் உயிர் பிழைத்த பலரும் தற்போது இந்த தகவலை வெளியிட்டு தங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்