40க்கும் மேற்பட்ட இடங்களில் கைவரிசை காட்டிய கில்லாடி திருடன்..!! போலீசில் சிக்கியது எப்படி..?
கோவில்பட்டி அருகே இன்ஜினியர் வீட்டை உடைத்து 18 பவுன் கொள்ளையடித்த மேலும் 3 பேர் கைது..
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புத்தூரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (50). இவர், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி டென்னிஸ் ராணி (48). இவர்களது மகள் சரிகா லட்சுமி (20). கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். மகன் வினய்குமார்.
இவரை ராசிபுரத்தில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பில் சேர்ப்பதற்காக ராஜ்குமார் தனது குடும்பத்துடன் கடந்தமாதம் ஜூன் 11ம்தேதி மதியம் புறப்பட்டுச் சென்றார். மேலும் வீட்டின் கேட் சாவியை மட்டும் பக்கத்து வீட்டில் கொடுத்துவிட்டு சென்றார். இந்நிலையில் ஜூன் 12ம் தேதி காலை ராஜ்குமார் வீட்டின் விளக்கை அணைப்பதற்காக பக்கத்து வீட்டுக்காரர் சென்றார்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர், உடனடியாக போலீசாருக்கும், ராஜ்குமாருக்கும் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேசன். மாறா நாலாட்டின்புத்தூர் போலீசார் வந்து வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.
அப்போது அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 18 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.9 லட்சம் ஆகும். இது குறித்து புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.. சிறப்பு தனிப்படை உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஜூலை 31ம்தேதி கோவில்பட்டியில் நடந்த வாகன சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான முறையில் பைக்கில் வந்த வாலிபர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், நெல்லை மாவட்டம் வள்ளியூர், கேசவநேரியைச் சேர்ந்த மாரிதுரை மகன் செந்தில்குமார் (28) என்பதும், நாலாட்டின்புத்தூரில் ராஜ்குமார் வீட்டில் 18 பவுன் கொள்ளையடித்தவர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து பைக், 8 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த கொள்ளையில் அவருடன் வள்ளியூர், கேசவநேரியைச் சேர்ந்த தங்கப்பாண்டியன் மகன் சிவலிங்கம் (39), ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா ஒருச்சேரிபுதூரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சுரேஷ் (25), கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மயிலாடியைச் சேர்ந்த ராஜசேகர் மகன் சந்தோஷ் (30) ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. தலைமறைவாக இருந்தவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் நாலாட்டின் புத்தூர் அருகே புளியந்தோப்பு பகுதியில் 3 பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடுவதாக எஸ்பி ஆல்பர்ட் ஜானுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேசன் மேற்பார்வையில் எஸ்பி தனிப்பிரிவு உதவி ஆய்வாளர்கள் செந்தில்குமார், அசோகன், நாலாட்டின்புத்துர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்சாம்ராஜ், தலைமை காவலர்கள் செல்லத்துரை, சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அப்போது போலீசாரை கண்டதும் 3 பேர் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள், நாலாட்டின்புத்தூரில் ராஜ்குமார் வீட்டில் கொள்ளையடித்த கேசவநேரியைச் சேர்ந்த சிவலிங்கம் (39), பவானி தாலுகா ஒருச்சேரி புதூரைச் சேர்ந்த சுரேஷ் (25), மார்த்தாண்டம் மயிலாடியை சேர்ந்த சந்தோஷ் (30) என்பதும், தமிழகம் முழுவதும் கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார், கோவில்பட்டி ஜே.எம். 1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..