சிக்கன் ஆர்டர் செய்தால் எலிக்கறி சாப்பிட வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மும்பையில் அனுராக் சிங் என்பவரும் அவரது நண்பர் அமீன் என்பவரும் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள பஞ்சாபி உணவகம் ஒன்றிற்கு கடந்த ஞாயிறன்று இரவு சாப்பிட சென்றுள்ளனர். அங்கு மட்டன் மற்றும் சிக்கன் சம்பந்தப்பட்ட உணவுகளை ஆர்டர் செய்துள்ளனர். உணவு வந்ததும் அனுராக் சிங் சிக்கனை சாப்பிட்டிருக்கிறார். அந்த இறைச்சியை சாப்பிட்ட போது அது கோழியின் இறைச்சிதானா என்பதில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதனை அவர் சோதித்த போது அதில் இறந்த எலியொன்று கிடந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து உணவகத்தின் மேலாளரான விவியன் ஆல்பர்ட்டை அழைத்து அது குறித்து கேட்டபோது அவர் சரியான பதில் வழங்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டிருக்கிறது. உடனடியாக மருத்துவமனை விரைந்த அவர்கள், உரிய சிகிச்சைக்குப்பின் சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்தனர்.