பட்டப்பகலில் அரங்கேறிய சம்பவம்.. குடும்பத்தகராறில் கணவனின் கொடூர வேலை..!
ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள பாறைமேட்டை சேர்ந்தவர் முருகன்-குப்பம்மாள் தம்பதியினரின் மகள் சந்தியா (22).
இவருக்கும் திருவள்ளூர் மாவட்டம், அம்மையார்குப்பம் பகுதியை சேர்ந்த ஓம்பிரகாஷ்(26), என்பவருக்கும் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. தற்போது 2 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் கணவன், மனைவிக்கு இடையே கடந்த சில மாதங்களாக மனகசப்பு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் சந்தியா கோபித்துக்கொண்டு அம்மையார்குப்பத்தில் இருந்து பாணாவரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று தங்கினார்.
இதையடுத்து நேற்று காலை மாமியார் வீட்டிற்கு சென்ற ஓம்பிரகாஷ், தனது மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். இதற்கு சந்தியா மறுப்பு தெரிவிக்கவே மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஓம்பிரகாஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தியாவின் கழுத்தை பலமாக குத்தியுள்ளார். இதில் சரிந்து விழுந்த சந்தியா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மனைவியை கொன்று விட்டு அதனை தனது மாமியாருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஓம்பிரகாஷ், ‘உன் மகளை கழுது அறுத்து கொன்று விட்டேன் வந்து வாரிட்டிபோ’ என கூறிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த கும்பம்மாள் உடனே வீட்டிற்கு விரைந்து சென்றார். அங்கு மகள் ரத்த வெள்ளத்தில் கழுத்தறுக்கப்பட்டு இறந்து கிடப்பதை கண்டு கதறிய தாய் இதுதொடர்பாக பாணாவரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அரக்கோணம் டிஎஸ்பி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி மற்றும் போலீசார் சந்தியாவின் சடலத்தை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் பாணாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியில் தலைமறைவாகியிருந்த ஓம்பிரகாஷை சுற்றி வளைத்து கைது செய்து திவீர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்பத் தகராறில் பட்டப்பகலில் மனைவியை, கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்