வரும் டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் குஜராத்தில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் மோடி அமித்ஷா ராகுல் கெஜ்ரிவால் ஆகிய மூக்கை தேசிய தலைவர்கள் குஜராத்தில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
குஜராத் சட்டமன்ற தேர்தலை முன்னோக்கி மூன்று முக்கிய கட்சிகளின் முக்கிய தலைவர்கள் குஜராத்தில் வாக்கு சேகரிப்பதற்காக முகாமிட்டுள்ளனர். ஒரே நாளில் இவர்களின் பிரச்சாரத்தால் குஜராத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பாஜக கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து மோடி அமித்ஷாவும், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக ராகுல் காந்தி மற்றும் ஆம் ஆத்மீ கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கெஜ்ரிவாலும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.
சுரேந்திரநகர், ஜபுசார், நவ்சாரி ஆகிய 3 இடங்களில் பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத்தின் துவாரகா, சோம்நாத், ஜூனாகத், கட்ச் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் செய்கிறார். இந்நிலையில் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் இருவரும் அங்கு நடக்கும் பொதுக் கூட்டங்களிலும் பங்கேற்கின்றனர்.
இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தலில் பிரச்சாரத்தை தவிர்த்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ராஜ்கோட், சூரத் ஆகிய இரு இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகிறார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அம்ரேலியில் பிரசாரம் செய்கிறார் மேலும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். ஒரே நாளில் 4 தேசிய தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் குஜராத்தில் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது.