மனைவியின் கண் முன்னே காதல் கணவருக்கு நேர்ந்த கொடூரம்..
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகரை சேர்ந்தவர் கார்த்திக் பாண்டி (26). ஒர்க் ஷாப்பில் ஒன்றில் மெக்கானிக்காக பணி செய்து வந்த இவர் சிவகாசியை சேர்ந்த நந்தினி என்பவரை காதலித்து வந்தார்.
இந்த நிலையில், இருவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த காதல் திருமணத்திற்கு நந்தினியின் சகோதரர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகு நந்தினி அதே பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார். இதனால் நந்தினியை தினமும் காலையில் இறக்கி விட்டு பின்னர் இரவில் வீட்டுக்கு கார்த்திக் பாண்டி அழைத்துச்சென்று வந்துள்ளார்.
வழக்கம் போல், நேற்று வேலைக்கு சென்ற நந்தினி இரவு வேலை முடிந்ததும் தனது கணவருக்காக காத்திருந்தார். அப்போது கார்த்திக் பாண்டி, நந்தினியை அழைத்துச் செல்ல அங்கு வந்தார். அப்போது அவரை வழிமறித்த சிலர் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கார்த்திக்பாண்டியனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதில் பலத்த காயம் அடைந்த கார்த்திக் பாண்டி, ரத்த வெள்ளத்தில் நந்தினியின் கண்முன்னே சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை கண்டு நந்தினி அலறி துடித்தார். இந்த சம்பவத்தால் ஸ்ரீவில்லிபுத்தூர் மெயின் ரோட்டில் ஏராளமானோர் திரண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு சூழல் நிலவியது.
பின்னர், இதுகுறித்து தகவலறிந்த சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லாவும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
மேலும் கொலை செய்யப்பட்ட கார்த்திக் பாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு கொலையாளிகள் யார் என்பதை குறித்தும் கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் போலீசார் முதற்கட்ட விசாரணையில், நந்தினியின் சகோதரர்கள் தான் கார்த்திக் பாண்டியனை கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, இந்த படுகொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் பாலமுருகன், தனபாலன் மற்றும் அவர்களின் கூட்டாளி சிவா ஆகிய மூன்று பேரை கைது செய்து திவீர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவியின் கண் முன்னே காதல் கணவன் அவரது சகோதரர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்