பண தகராறில் சுடுகாட்டில் நிகழ்ந்த கொடூரம்… கதறும் உறவினர்கள்…!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள மூப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி (37).இவர் தனது சொந்த டூரிஸ்ட் வேனில் தொழிலாளர்களை தனியார் ஆலைகளுக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.
இவருக்கு மகாதேவி (30) என்ற மனைவியும், மகாஸ்ரீ (11), மதி (4) என்ற இரு குழந்தைகளும் உள்ளனர். தினமும் இரவு 8 மணிக்கு வேலை முடிந்து வீடு திரும்புவது வழக்கம். ஆனால், நேற்று இரவு வெகுநேரமாகியும் மாடசாமி வீட்டுக்கு வராததால், செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால், குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர்.
இந்நிலையில், மூப்பன்பட்டி சுடுகாட்டில் மாடசாமி கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டிருப்பதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் சுகாதேவி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.
பின்னர், கொலை செய்யப்பட்ட மாடசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், கொலையான மாடசாமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கோபிக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. ஒரு வாரத்துக்கு முன் கோபி வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்ட மாடசாமி, அப்போது கோபியை மாடசாமி தாக்கினார்.மேலும், இந்த தகராறில் ஆத்திரமடைந்த கோபி, நேற்று இரவு மாடசாமியை சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று வெட்டிக் கொன்றது தெரியவந்துள்ளது.
இதனிடையே தலைமறைவாக உள்ளதாக கூறப்படும் கோபியை கைது செய்ய தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.