ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..! சிக்கிய பாஜக அரசியல் புள்ளி..!
கடந்த ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அதன் பின் அந்த வழக்கில் 11 நபர்கள் கைது செய்யப்பட்டு, செம்பியம் தனிப்படை போலீசார், போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரணை செய்தனர். அதற்கிடையே, கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான திருவேங்கடம் என்பவரை, ஆயுதங்களை பறிமுதல் செய்ய அழைத்துச் சென்ற போது தப்பி ஓட முயன்றதாக காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
அதையடுத்து போலீஸ் காவலில் வைத்து 10 பேரிடமும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திய பின் மீண்டும் பூந்தமல்லி கிளை சிறையில் அடைத்துள்ளனர். அந்த கொலையில் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர் களாக கருதப்படும் மூன்று பேரையும் மீண்டும் காவலில் எடுத்து போலீசார் விசாரணை செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியானது.
மேலும் அந்த கொலையின் பின்னணியில் இருப்பது யார்..? கூலிப்படைக்கு எவ்வளவு பணம் கைமாற்றபட்டது உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது கைது செய்யப்பட்டவர்களின் வங்கி கணக்குக்கு சமீபத்தில் 50 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
மேலும், பெண் வழக்கறிஞர் மலர் கொடியின் வங்கி கணக்கில் மிகப்பெரிய அளவில் 50 லட்சம் ரூபாய் பணம் பரிமாற்றம் நடந்துள்ளதும் தெரிய வந்தது. அதுதொடர்பாக சென்னையை சேர்ந்த பெண் வழக்கறிஞர் மலர்கொடியை கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணையை நடத்தி வந்தனர்.
ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷின் உறவினரான அருளின் செல்போன் அழைப்புகளை வைத்து தற்போது பெண் வழக்கறிஞர் மலர்கொடியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருளும் வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. பழிக்குப் பழி என்னும் நோக்கில் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்திருந்த நிலையில் கொலையின் பின்னணியில் இருந்து பொருளாதார உதவி செய்தது யார்..? இந்த கொலைக்கான திட்டத்தை தீட்டி கொடுத்தது யார்..? என பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த கொலையில் மிகப்பெரிய பொருளாதார பின்னணி கொண்ட நபர் யாரோ ஒருவர் உதவி செய்திருக்கிறார் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அருளுக்கு உதவியாக இருந்த புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஹரிஹரன் மற்றும் திருவள்ளுர் சதிஷ் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர்களாக கருதப்படும் பொன்னை பாலு, அருள், திருமலை ஆகிய மூன்று பேரையும் மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய திட்டம் தீட்டி வருகின்றனர். அப்போது இந்த பணப் பரிவர்த்தனை குறித்து அவர்களிடம் விசாரணை செய்ய உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், இன்னும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வடசென்னை மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி செயலாளரும், ஆற்காடு சுரேஷின் தோழியான பெண் ரவுடி புளியந்தோப்பு அஞ்சலையை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 11 பேர் கைதான நிலையில், மேலும் 3 பேர் சேர்த்து போலீசில் சிக்கியவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இந்த படுகொலை தொடர்பாக கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், விரைவில் இதன் பின்னணியில் இருப்பவர்கள் கண்டறியப்படுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
– லோகேஸ்வரி.வெ