தம்பி செய்த சேட்டையால் கள்ளக்காதலியிடம் சிக்கிய அண்ணன்..!
ராணிப்பேட்டை மாவட்டம் குப்பிடிச்சாத்தம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (30) என்பவருக்கு திருமணமான நிலையில் சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவருடன் சென்னை பெருங்குடியைச் சேர்ந்த சத்தியவாணி(36) என்ற பெண் வேலை செய்துள்ளார். இவருக்கு கணவர் இறந்த நிலையில் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
ஒரே இடத்தில் வேலை பார்க்கும் இருவருக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக கள்ளக்காதலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தனக்கு திருமணம் ஆகவில்லை எனக்கூறி பழகி வந்த சதீஷ்குமார், இருவரும் பெற்றோரிடம் பேசி திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதனால் தன்னை விரைவில் திருமணம் செய்து கொள்ளும்படி சத்தியவாணி டார்ச்சர் செய்ததால் கள்ளகாதலில் இருந்து பின்வாங்கியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு தனது சொந்தஊருக்கு திரும்பிய சதீஷ்குமார், மீண்டும் சென்னைக்குச் செல்லாமலும் சத்தியவாணியின் செல்போன் அழைப்புகள் வந்த போதும் அதனை எடுக்காமல் புறக்கணித்துள்ளார்.
வேலைக்கு செல்லாதது குறித்து வீட்டில் உள்ளவர் கேட்டபோது விடுமுறை இருப்பதாக கூறி சமாளித்துள்ளார்.
இந்தநிலையில் சதீஷ்குமாரை காரில் கடத்தி வரும்படி சத்தியவாணி கூலிப்படை ஏவி நேற்று முன்தினம் அனுப்பி வைத்துள்ளார். கூலிப்படையினர் வந்தபோது சதீஷ்குமார் வீட்டில் இல்லாததால் அவரது அண்ணன் ரஞ்சித் குமாரை (35), காரில் வலுக்கட்டாயமாக ஏற்றி சென்னைக்கு கடத்தியுள்ளனர்.
பல மணி நேரம் ஆகியும் ரஞ்சித் குமார் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் தேடியபோது சதீஷ்குமாரை தொடர்பு கொண்ட சத்தியவாணி ”உனது அண்ணனை கூலிப்படை வைத்து நான் தான் கடத்தினேன். நீ சென்னைக்கு வந்தால் மட்டுமே அவரை அனுப்புவேன். இல்லாவிட்டால் விடுவிக்க மாட்டேன்” என கூறினாராம்.
இதுகுறித்து வாழைப்பந்தல் காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் சத்தியவாணியின் செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்தனர்.
அப்போது அவர் சென்னை பெருங்குடியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை பெருங்குடி சென்று ரஞ்சித் குமாரை மீட்டு, சத்தியவாணியை கைது செய்து விசாரித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், சத்தியவாணிக்கு, கூலிப்படை ஏற்பாடு செய்ய உடந்தையாக இருந்தது அவரது தோழிகளான சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த தனலட்சுமி(42), புவனேஸ்வரி (28) என தெரியவந்தது. அவர்களையும் போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய சென்னை கிண்டி பகுதியில் இருந்த டாட்டா சுமோவையும் பறிமுதல் செய்து கூலிப்படையை சேர்ந்த 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்