வாருங்கள் எங்கள் மாநிலத்தில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கு என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாயில் பேசியுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி துபாயில் உலக கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சி வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 192 நாடுகள் பங்கேற்றுள்ளன, அதன்படி மார்ச் 25 முதல் 31 ஆம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து, தமிழக அரசு சார்ப்பில் அமைக்கப்பட்ட தமிழக அரங்கை திறந்து வைப்பதற்காகவும், முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் 4 நாள் அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றுள்ளார். இதையடுத்து அந்த கண்காட்சியில் தமிழக அரங்கை திறந்து வைத்தா முதல்வர், முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக நேற்று(மார்ச்.25) ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து, இன்று(மார்ச்.26) ஐக்கிய அமீரகம்-தமிழ்நாடு இடையே 1,600 கோடி ரூபாய்க்கான முதலீடு ஒப்பந்தமானது. குறிப்பாக நோபல் குழுமம் சார்பில் 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் இரும்பு தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
தொழில் முதலீட்டாளர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிகழ்த்திய உரையில், “தமிழ்நாடு வணிக மற்றும் வர்த்தக வாய்ப்புகள் அமைந்த மாநிலம். கிட்டத்தட்ட ஏழரை கோடி மக்கள் தொகை கொண்ட மாநிலம். 2030 ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றிட வேண்டும் என்ற தொலைநோக்குடன் நாங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
அந்த லட்சிய இலக்கை அடைவதற்காகத் தமிழ்நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் பணியாளர்களுடைய திறனை மேம்படுத்துதல், வருங்கால தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பணியாளர்களை தயார்ப்படுத்துதல் உள்ளிட்ட பல முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
இந்த நேரத்தில் நீங்கள் எங்கள் மாநிலத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளும்,சாத்தியக்கூறுகளும் ஏராளமாக உள்ளது. வாருங்கள் எங்கள் மாநிலத்தில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கு. எல்லோரும் பயனடைவோம் என்று இந்த தருணத்தில் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்” என கூறினார்.