தமிழகத்தின் 2022-23-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டப்பேரவையில் நாளை (மார்ச் 18) காலை 10 மணிக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் சட்டப்பேரவையில் ஆளுநர் உரையைத் தொடர்ந்து, அடுத்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை அரசால் தாக்கல் செய்யப்படும்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய அரசு மார்ச்மாதத்துக்குப் பதில் பிப்.1-ம் தேதியே நாடாளுமன்றத்தில் தனது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் நடைமுறையைத் தொடங்கியது. இதையடுத்து, அடுத்த சில தினங்களில்தமிழக அரசும் அடுத்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வந்தது.
இந்நிலையில், கடந்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கி, அதிமுக அரசுதனது இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தது. இதைத்தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியைப் பிடித்ததால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி, அரசின் திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
அதில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அவற்றில் சாத்தியமான திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. பல்வேறு திட்டங்களுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரும் 2022-23-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை நாளை (மார்ச் 18) தாக்கல் செய்யப்படுகிறது.
முன்னதாக இதற்கான அறிவிப்பை வெளியிட்ட பேரவைத் தலைவர் மு.அப்பாவு, ”மார்ச்18-ம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் தமிழக நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் தாக்கல் செய்வார். அன்று அலுவல்ஆய்வுக்குழு கூடி, பேரவைக் கூட்டத்தைஎத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.