“அஹம்பாவம் பற்றி ஸ்ரீ மஹாபெரியவா” சொன்னது..!
நாம் இதைச் சாதித்தோம், அதைச் சாதித்தோம் என்று அஹம்பாவப்பட கொஞ்சம்கூட நியாயம் இல்லை.
நாம் எதையும் சாதிப்பதற்கான புத்தியோ, தேக பலமோ எங்கிருந்து வந்தது?
இந்த பிரபஞ்ச காரியங்கள் அனைத்தையும் செய்கிற ஒரு மஹா சக்தியிடமிருந்தே நம்முடைய, சக்தி எல்லாம் வந்திருக்கிறது.
அது இல்லாவிட்டால் நம்மிடம் ஒரு சுவாசம்கூட இருக்கமுடியுமா.
ஒருநாள், இதனை சாதித்ததாக எண்ணிக் கர்வப்படுகிற நம்மைவிட்டுச் சுவாசம் போய் விடுகிறது. அதைப் பிடித்து வைத்துக் கொள்கிற சாமர்த்தியம் நமக்குக் கொஞ்சம்கூட இல்லை. அப்போது நம் சக்தி எல்லாமும் சொப்பனம் மாதிரிப் போய் விடுகிறது.
கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலும்கூட, சக்தி சமுத்திரமாக இருக்கப்பட்ட அம்பாளின் ஒரு சிறு துளி அனுக்கிரகத்திலேயே நடக்கிற காரியங்களை, நம்முடையதாக நினைத்து அஹம்பாவப்படுவது அசட்டுத் தனம்தான் என்று தெரியும்.
எத்தனைக்கெத்தனை இந்த அனுபவத்தில் தெரிந்துகொண்டு அம்பாளுக்கு முன் ஒரு துரும்பு மாதிரி அடங்கிக் கிடக்கிறோமோ அத்தனைக்கத்தனை அவள் அனுக்கிரஹமும் நமக்குக் கிடைக்கும்.
நாம் நன்றாக எழுதுகிறோம், பேசுகிறோம், பாடுகிறோம், வேறு ஏதோ காரியம் செய்கிறோம் என்று உலகம் புகழ் மாலை போடுகிறது. அதே சமயத்தில் நமக்குத் தலைகனம் ஏறத்தான் தொடங்கும்.
அப்போது நமக்குச் சக்தி உண்டா என்று யோசிக்க வேண்டும். எந்த இடத்திலிருந்து நமக்கு சக்தி வந்ததோ, அந்த அம்பாள் இருக்க, புகழுக்குப் பாத்திரராகி அஹம்பாவப்பட நமக்குக் கொஞ்சம்கூட உரிமையில்லை என்று உணர வேண்டும். வருகிற பெருமையை எல்லாம் அவற்றுக் குறிய பராசக்தியின் பாதாரவிந்தங்களிலேயே அர்ப்பணம் செய்துவிட வேண்டும்.
பெருமைப் பூரிப்பில் இருப்பதைவிட, இப்படி அர்ப்பணம் பண்ணிப் பாரம் இல்லாமல் லேசாக ஆவதுதான் நமக்கே பரம சௌக்கியமாக இருக்கும்.
நமக்கு அஹம்பாவமே இல்லை என்கிற எண்ணம் வந்து அதில் ஒரு பூரிப்பு உண்டாகிவிட்டால், அதுவும்கூட அஹம்பாவம்தான். எனவே அஹம்பாவம் தலை தூக்க இடமே தராமல் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
எத்தனை கண்குத்திப் பாம்பாக இருந்தாலும், துளி இடுக்குக் கிடைத்தால்கூட ஏதோ ஒரு ரூபத்தில் நமக்கே தெரியாமல் அஹம்பாவம் உள்ளே புகுந்து விடும். இது போகவும் அவள் அருள்தான் வழி. அவளேயே வேண்டி நம் புகழையெல்லாம் அவளுக்கு அர்ப்பணம் பண்ணிவிட்டால், நமக்கு ஒரு குறைவுமில்லாமல் மேலும் மேலும் அவள் அனுக்கிரஹம் கிடைக்கும்.
– வீர பெருமாள் வீர விநாயகம்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..