குருவிகளிடம் ஒரு கிரியா சக்தி..! மஹாபெரியவா சொன்னது..! மஹாபெரியவா கதை – 11
“யார் ஜகத்குரு?”ஆவேசமாகக் கேட்ட ஒரு பண்டிதர்…
“கை, கால் இல்லாத குருவிகள் கூடு கட்டுகின்றன நமக்குக் கைகால் உண்டு… என்றாலும் பறவைகள் மாதிரி கூடு கட்ட முடிய வில்லை.
குருவிகளிடம் ஒரு கிரியா சக்தி உண்டு. அது என்னிடம் இல்லை. அதனால் குருவி என்னுடைய குரு…” என்று சொல்லி கன்னத்தில் போட்டுக் கொண்டு கைகூப்பி வணங்கினா மஹா பெரியவா…
“நீங்கள் தான் ஜகத்குரு” என்று மனமாரப் போற்றிப் பணிந்தார்கள் பண்டிதர்கள்…
சொன்னவர் : ப்ரும்ம ஸ்ரீ ராம கிருஷ்ண தீக்ஷிதர், காஞ்சிபுரம்.
தொகுப்பாளர் : டி.எஸ். கோதண்டராம சர்மா
தட்டச்சு : வரகூரான் நாராயணன் மாமா…
1933 ஆம் வருஷம் காசி யாத்திரையின் போது நடந்த நிகழ்ச்சிக்கு இங்கே பகிரப்படுகிறது. காசி பனாரஸ் ஹிந்து யூனிவர்ஸிடிக்கு ஒரு மாலைப்போழுதில் ஸ்ரீ மஹா பெரியவா ‘சென்றார்கள்’.
பெரியவா சென்ற போது மண்டக்குளத்தூர் பிரம்ம ஸ்ரீ சின்ன சாமி சாஸ்திரிகள் பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பைய தீட்சிதர் எழுதிய ”விதிரஸாயனம்” என்ற மீமாம்ஸா சாஸ்திரம். ஸ்ரீ தீட்சிதரின் நடையழகில் ஸ்ரீ பெரியவா சொக்கிப் போனார். உடன் வந்திருந்த ”ஆத்ம வித்யா பூஷணம்” இஞ்சிக்கொல்லை பிரும்ம ஸ்ரீ ஜகதீஸ்வர சாஸ்திரிகளிடம் சொல்லிச் சொல்லி சந்தோஷப்பட்டார் மஹா பெரியவா.
பின்னர் அப்பைய தீட்சிதரின் எல்லாக் கிரந்தங்களையும் ஸ்ரீ மஹா பெரியவா படித்தார். காசி மன்னர் அரண்மனையில் பெரியவாளுக்கு பிரம்மாண்டமான வரவேற்பு. ஏராளமான பண்டிதர்கள், நகரத்தின் முக்கியப் பிரமுகர்கள் வந்திருந்தார்கள்.
அவர்கள் மனத்தில் ஓர் இளக்காரம், இனம் புரியாத அசூயை, ”இவர் என்ன ஜகத்குரு என்று பட்டம் போட்டுக்கொள்வது”? இரண்டு கேள்வி கேட்டு மடக்கி விடலாம் என்ற என்னத்தோடு சிலர் வந்திருந்தார்கள்!…
பெரியவா வந்து அமர்ந்ததும் ஒரு பண்டிதர் ஆவேசமாகக்கே கேட்டார் “அது யார் ஜகத்குரு”? என்று கேட்டார்.
“நான் தான்” என்றார் மஹா பெரியவா…
“ஓஹோ? நீங்க ஜகத்துக்கே குருவோ?”
“இல்லை ஜகதாம் குரு: ந [நான் ஜகத்துக்கெல்லாம் குரு- என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை]
ஜகதிபத்யமானா: ஸர்வே மம குரவ :
[உலகில் உள்ள எல்லாப் பிராணிகளும் எனக்குக் குருக்கள் என்ற பொருளில் நான் ஜகத்குரு]
வடநாட்டுப் பண்டிதர்கள் திகைத்துப் போனார்கள். இவ்வளவு அருமையான, எளிமையான விளக்கத்தை அவர்கள் எதிர்பார்க்க வில்லை.
பெரியவா அந்தப்பெரிய அறையின் சுவர்களின் மேற்பகுதியில் புறாக்களுக்காக அமைக்கப் பட்டிரூந்த சிறு, சிறு பொந்துகளில் கட்டப்பட்டிருந்த குருவிக் கூடுகளைப் பார்த்தார். பண்டதர்களிடம் காட்டி “கிமிதம்”? [இது என்ன?] என்று கேட்டார்.
“நீட” [கூடு]
“கேன நிர்மிதம்?” [யாரால் கட்டப்பட்டது?]
“சடகே..” [குருவிகள்]
“கை, கால் இல்லாத குருவிகள் கூடு கட்டுகின்றன. நம் எல்லோருக்கும், கை, கால் உண்டு என்றாலும் பறவைகள் மாதிரி கூடு கட்ட முடிய வில்லை.
குருவிகளிடம் ஒரு கிரியா சக்தி இருக்கிறது. அது என்னிடம் இல்லை. அதனால் குருவி, என்னுடைய குரு…” என்று சொல்லி கன்னத்தில் போட்டுக் கொண்டு கை கூப்பி வணங்கினார்.
இதை நேரில் கண்ட வடநாட்டுப் பண்டிதர்கள் பிரமித்துப் போய் விட்டார்கள். “நீங்கள் தான் ஜகத்குரு” என்று மனமாரப் போற்றிப் பணிந்தார்கள்.
மஹா பெரியவா காசியில் இருந்த கடைசி நாள் வரை ஏராளமான பண்டிதர்கள் அனைவரும் ஒற்றுமையாக தினமும் முகாமிற்க்கு வந்து நமஸ்காரம் செய்து கொண்டிருந்தார்கள்..