750 ஆண்டிற்கு பிறகு மீட்கப்பட்ட சிவலிங்கம்..! இந்த சிவலிங்கத்திற்கு இத்தனை சிறப்புகளா..?
கடலூர் அடுத்த புவனகிரி அருகே 750 ஆண்டு பழமையான சோழர்கள் கால 5½ அடி உயர சிவலிங்கம் அரச மர வேரில் இருந்து மீட்பு. சிவலிங்கத்திற்கு பீடம் அமைத்து கிராம மக்கள் வழிபாடு. பெண்கள் ஒன்று சேர்ந்து கும்மியடித்து சிவனை வழிபட்டனர்.
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே ஆதிவராக நல்லூர் கிராமத்தின் ஊருக்கு வெளியே வேம்பு, அரசு மரத்தின் வேர்களுக்கு அருகே ஒரு சிவலிங்கத்தின் தலைப்பகுதி மட்டும் வெளியே தெரிந்த நிலையில் பல ஆண்டுகளாக இருந்தது.
இந்நிலையில் ஊர்ப் பொதுமக்கள், ஆதிவராகநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர், விஏஓ மற்றும் கோவை அரன் பணி அறக்கட்டளை சிவனடியார்கள் ஒன்று சேர்ந்து தலைப்பகுதி மட்டும் தெரிந்து கொண்டிருந்த சிவலிங்கத்தை ஜேசிபி எந்திரத்தின் மூலம் மீட்டனர்.
இந்த சிவலிங்கமானது 5½ அடி உயரத்திலும் 54 இன்ச் அளவு சுற்றளவிலும் இருப்பதாக கூறப்படுகிறது. பிரம்ம பாகம், விஷ்ணு பாகம், ருத்ர பாகம் என்ற மூன்று பகுதிகளை உள்ளடக்கியதாக இருப்பதாக சிவலிங்கா அடியார்கள் தெரிவித்தனர்.
ஆய்வாளர்களின் கூற்றுப்படி இவ்விடத்தில் மிகப் பழமையான சிவாலயம் இருந்திருக்க வாய்ப்புள்ளதாகவும், இவ்விடத்தில் ஆங்காங்கே கிடைக்கப்பட்ட செங்கற்களையும் சிவலிங்கத்தின் அமைப்பை வைத்துப் பார்க்கும் பொழுது சுமார் 750 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.
மீட்ட சிவலிங்கத்தை, சிவலிங்கத்திற்கு பீடம் அமைத்து பிரதிட்டை செய்தனர், உடனடியாக நந்தி மற்றும் பலிபீடம் நந்தி வாங்கப்பட்டு இத்துடன் சேர்த்து பிரதிட்டை செய்யப்பட்டது. அதன் பிறகு சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் கிராம மக்கள் கலந்து கொண்டு பெண்கள் கும்மி அடித்தும் சிவனை வழிபட்டனர்.
Discussion about this post