மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு.. உதவி பேராசிரியர் உட்பட 4 பேர் கைது…!
கோவை மாவட்டம் வாழ்பாறை பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஒருங்கிணைந்த சேவை மையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
அந்த நிகழ்ச்சியில் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா? என்று மாணவிகளிடம் கேட்கப்பட்டது. அப்போது சில மாணவிகள் மிகுந்த சோர்வுடன் காணப்பட்டுள்ளனர். இதனை கண்ட அலுவலர் கிருஷ்ணவேணி மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் இந்த கல்லூரியில் பணியாற்றும் சில பேராசிரியர்கள் மற்றும் லேப் டெக்னீசியன் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, ஒருங்கிணைந்த சேவை மையம் சார்பில் பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் உதவி பேராசிரியரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் கல்லூரியில் பணியாற்றி வந்த தற்காலிக உதவி பேராசிரியர்கள் சதீஷ்குமார், முரளி ராஜ், ராஜபாண்டி மற்றும் லேப் டெக்னீசியன் அன்பரசு ஆகியோர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.