சபரிமலை மகர விளக்கு பூஜை..! காண கண் கோடி வேண்டும்..!!
இரண்டு முறை தெரிந்த மகரஜோதி லட்சக்கணக்கான பக்தர்கள் சரண கோஷங்கள் எழுப்பி வழிபட்டனர்.
கேரளாவில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மகர விளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் 30ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு அன்று முதல் நாள்தோறும் சராசரியாக 92 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மகரஜோதி விழாவில் உச்ச நிகழ்வான மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் இன்று நடைபெற்றது. இதற்காக பந்தளம் அரண்மனையில் இருந்து ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக கொண்டுவரப்பட்ட திருவாபரணங்களை இன்று மாலை 5.45 மணி அளவில் கேரளா கூட்டுறவு மற்றும் தேவசம்போர்டு துறை அமைச்சர் வி.என்.வாசன் தலைமையில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஸ்ரீகாந்தன் எம்.பி, தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் பிரமோத் நாராயணன், ஜெனிஸ் குமார்,ராகுல் மங்கூத்தில் மற்றும் பத்திரம் திட்டம் மாவட்ட ஆட்சியர் பிரேம் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் தேவசம் போர்டு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெற்றுக் கொண்டனர்.
பின்னர் சபரிமலை தந்திரி கண்டரு பிரம்மதத்தர் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி ஆகியோர் திருவாபரணங்களை பெற்று பதினெட்டாம் படி வழியாக சன்னிதானத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் ஐயப்பனின் தந்தை வழி அரசனான பந்தள மன்னர்கள் ஐயப்பனுக்காக அளித்த ஆபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில் கோவில் நடை மூடப்பட்டது.
சரியாக மாலை 6:43 மணிக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்ட பின் கோவில் நடை திறக்கப்பட்ட போது, சன்னதிக்கு எதிரே உள்ள பொன்னம்பலமேட்டில் இரண்டு முறை மகரஜோதி தென்பட்டது. சபரிமலையில் மேகம் மூட்டத்துடன் லேசான சாரல் மலையும் பெய்து வந்த போதும் இரண்டு முறை மகரஜோதி தெளிவாகத் தெரிந்தது.
இதனை காண்பதற்காக சபரிமலையில் காத்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சரண கோஷங்கள் எழுப்பி மகரஜோதியை தரிசித்தவுடன்,திருவாபரணங்கள் அணிந்து ராஜகோலத்தில் காட்சி தரும் சபரிமலை ஐயப்பனையும் பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.
சன்னிதானம் தவிர புல்மேடு, பாண்டித்தாவளம், பம்பை, நிலக்கல் என பத்துக்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் மகரஜோதியை காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தந்த பகுதிகளில் காத்திருந்த பக்தர்கள் மகரஜோதியை கண்டு தரிசித்தனர்.
சபரிமலை ஐயப்பன் இந்த ராஜகோலத்தில் ஜனவரி 17ஆம் தேதி வரை காட்சி தருவார்.அதன் பின்னர் பந்தள ராஜா வம்சத்தினர் பூஜைகளுக்குப் பின் இந்த ஆண்டு மகர விளக்கு பூஜை நிறைவு பெற்று கோவில் நடை அடைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இந்த ஆண்டு மண்டலம் மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களுக்காக மூன்று முறை சபரிமலைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..