உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் முதன் முறையாக சீனாவிடம் இராணுவ உபகரணங்கள் மற்றும் உதவிகளை ரஷ்யா நாடியுள்ளது.
கடந்த 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தனது கொடூர தாக்குதலை தொடங்கியது. இந்த தீவிர தாக்குதல்கள் மூலம் உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. எனினும்,ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இதன் காரணமாக அங்குள்ள மக்கள் அனைவரும் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்நிலையில், உக்ரைனில் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த சீனாவின் உதவியை ரஷ்யா கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, வாஷிங்டனில் இருக்கும் சீன தூதரக செய்தித்தொடர்பாளர் பதில் அளிக்கையில், ரஷ்யாவுக்கு சீனா உதவுவது குறித்த எந்த தகவலையும் நான் இதுவரை கேள்விப்படவில்லை, என்று மறுப்பு தெரிவித்தார்.
இதையடுத்து, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், ரோம் சென்று இன்று சீனாவின் உயர்மட்ட தூதரக அதிகாரி யாங் ஜீச்சியை சந்திப்பார் என்று வெள்ளை மாளிகை நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள் ரஷிய தாக்குதலை மனித உரிமைகள் மீறல் என்று கண்டித்து வருகின்றன. ரஷ்யாவுக்கு மேற்கத்திய நாடுகளின் அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளதால், சீனா ரஷ்யாவுக்கு தனது ஒத்துழைப்பை வழங்குவது கடினம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் விவகாரத்தில் இதுவரை ரஷ்யாவை கண்டிக்காத சீனா, உக்ரைன்-ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வலியுறுத்தியுள்ளது. இன்னும் ரஷ்யாவின் கோரிக்கைக்கு சீனா தரப்பில் எந்த பதிலும் வெளியாகவில்லை என அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.