ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு வருகிற நவம்பர் 6-ந்தேதி அனுமதியளிக்க வேண்டும் என்று தமிழக போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும் அனுமதி வழங்க மறுத்தால் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 2ம் தேதி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடத்துவதற்கு அனுமதி கோரியிருந்தனர். தமிழகம் முழுவதும் சுமார் 50 இடங்களில் பேரணி நடத்துவதற்கு அனுமதி கேட்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் உயர் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் பேரணி நடத்த அனுமதி வழங்கியது.
மாநிலத்தில் மத உணர்வுகளை தூண்டும் பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக போலீஸ் பேரணிக்கு அனுமதி மறுத்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய சூழலில், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட எந்த அமைப்புகளின் ஊர்வலம் மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்க இயலாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அனுமதி வழங்க மறுத்தால் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.