ஒன்றிய அரசை விமர்சித்த ராகுல் காந்தி..!
பொதுத் துறை வங்கிகளின் பணத்தை கடன் என்ற பெயரில் தங்களுடைய மோசடி நண்பா்களுக்கு வாரி வழங்குவதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினா். அப்போது, அவா்கள் கூறிய குறைகளை ராகுல் கேட்டறிந்தார்.
இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், பொதுத்துறை வங்கிகள் மக்களுக்கு சேவையாற்ற முன்னுரிமை அளிக்க வேண்டும் ஆனால், இப்போது லாபத்துக்கு முன்னுரிமை அளிக்க கட்டாயப்படுத்தப்படுத்துவதாக குற்றம்சாட்டி உள்ளார்.
இதனால் மக்களுக்கு சிறப்பான சேவையை அளிக்க முடியாமல் போவதாகவும் வங்கிகளில் ஊழியா் பற்றாக்குறை நிலவுவது பணிச்சூழலை மோசமாக்குகிறது என தெரிவித்துள்ள ராகுல் பெண் ஊழியா்களுக்கு சமமான வாய்ப்புகள் அளிக்கப்படுவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பொதுத் துறை வங்கிகளின் பணத்தை தங்களுடைய மோசடி நண்பா்களுக்கு கடன் என்ற பெயரில் வாரி வழங்குவதை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஓன்றிய அரசு நிறுத்த வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.
