ராகுல் காந்தி 2013ம் ஆண்டு செய்த சிறு தவறு இன்று அவருக்கு பதவியை இழக்கும் அளவிற்கு பாதகமாக மாறியுள்ளது பெரும் விவாதமாக உருவெடுத்துள்ளது.
ராகுல் காந்தி தகுதி நீக்கம்:
2013ம் ஆண்டு மன்மோகன் சிங் அரசு மக்கள் பிரதிநிதிகள் சட்டம் 1951-ல் ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்தது. அதன் படி ஒரு எம்..பி. அல்லது எம்.எல்.ஏ. தண்டனை விதிக்கப்பட்ட நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் மேல்முறையீடு செய்தால், தண்டனையை ரத்து செய்யும் நாள் வரை அல்லது தண்டனை உறுதி செய்யப்படும் நாள் வரை அவர் பதவியில் தொடர்வார் என்பது தான் அது.
ஆனால் அந்த சட்டத்திற்கு ராகுல் காந்தியே அப்போது எதிர்ப்பு தெரிவித்ததோடு, சட்ட திருத்தத்தை கிழித்தெறிந்தார். இதையடுத்து சட்ட திருத்தமும் திரும்ப பெறப்பட்டது. ஒருவேளை அன்று அந்த சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டிருந்தால் ராகுல் காந்தியின் பதவி இன்று பறிபோயிருக்காது.
ஏனெனில் மோடி என்ற பெயரை அவதூறாக விமர்சித்த வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சூரத் நீதிமன்றம், அவருக்கு உடனே ஜாமீன் வழங்கியதோடு, மேல்முறையீடு செய்யவும் அனுமதி வழங்கியுள்ளது. சட்ட வல்லுநர்களின் ஆலோசனையின் படி ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார் என்றால் அவரது தண்டனை உறுதி செய்யப்படும் வரையிலோ அல்லது ரத்தாகும் வரையிலோ அவர் பதவியில் நீடித்திருக்க வாய்ப்பிருந்திருக்கும். இந்த விவாகரத்தில் மக்களவை செயலகமும் மூக்கை நுழைத்திருக்க முடியாது என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
2013ல் நடந்தது என்ன?
ஜூலை 10, 2013 அன்று, உச்ச நீதிமன்றம் எந்தவொரு எம்.பி., எம்.எல்.ஏ அல்லது எம்.எல்.ஏ., ஒரு குற்றத்தில் ஈடுபட்டு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால், அவர்கள் உடனடியாக பதவியை இழக்க நேரிடும் என்று தீர்ப்பளித்தது.
ஆனால் அதற்கு முன்னதாக, தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள் மாவட்ட நீதிமன்றங்கள், உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் என அனைத்து நீதிமன்றங்களையும் நாடி இறுதியாக தீர்ப்பு உறுதி செய்யப்பட்டால் மட்டுமே பதவி இழக்க நேரிடும் என்ற முறை பின்பற்றப்பட்டு வந்தது.
ஜூலை 10, 2013 அன்று, நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக் மற்றும் எஸ்.ஜே.முகோபாதயா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8(4) பிரிவை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவித்தது, இது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களின் தண்டனையை மூன்று மாதங்களுக்கு மேல்முறையீடு செய்ய அனுமதித்தது.
இதனால் அப்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்த ஆர்ஜேடி கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தீவன ஊழலில் வழக்கில் சிக்கியிருந்தார். இதையடுத்து அவசர அவசரமாக மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு, மக்கள் பிரதிநிதித்துவ மசோதாவில் திருந்தங்களை மேற்கொண்டது.
ஆகஸ்ட் 30 அன்று மாநிலங்களவையில் சட்ட அமைச்சர் கபில் இந்த சட்ட திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தினார். மக்கள் பிரதிநிதிகள் குற்றம் நிரூபிக்கப்பட்ட உடனேயே தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என்ற திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மத்திய அரசும் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தது, அதை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கிழித்தெறிந்த ராகுல் காந்தி:
2013, செப்டம்பர் 24 அன்று, கால்நடைத் தீவன ஊழல் தீர்ப்புக்கு சில நாட்களுக்கு முன்பு, மத்திய அரசு இந்த மசோதாவை ஒரு அவசரச் சட்டமாக நடைமுறைக்குக் கொண்டுவர முயற்சித்தது, ஆனால் எதிர்பாராத விதமாக அப்போதைய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளப்பியது. டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், இந்த அவசரச் சட்டத்தை “கிழித்து எறியப்பட வேண்டிய முழு முட்டாள்தனம்” என்று கூறிய, அதனை கிழித்தெறிந்தார். பிரதமர் மன்மோகன் சிங் வெளிநாட்டில் இருந்த சமயத்தில் ராகுல் காந்தி இவ்வாறு நடந்து கொண்டது பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
லாலு பிரசாத் பதவி நீக்கம்:
ராகுல் காந்தி தனது தனிப்பட்ட கருத்தை பதிவு செய்த சில நாட்களுக்குப் பிறகு, மன்மோகன் சிங் அரசு அவசரச் சட்டம் மற்றும் மசோதா இரண்டையும் திரும்பப் பெற்றது. அக்டோபர் 2013 இல், லாலு யாதவ் மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ஆறு ஆண்டுகள் (மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ்) அவர் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து. பின்னர் அவர் 11 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என அறிவிக்கப்பட்டார். அந்த தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதே லாலு பிரசாத் யாதவ் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வர முக்கிய காரணமாக அமைந்தது.
அன்று ராகுல் காந்தி கிழித்தெறிந்த அந்த சட்ட மசோதா நிறைவேறாமல் போனது தான், இன்று அவர் பதவியை இழக்க காரணமாக அமைந்துள்ளது.
Discussion about this post