இந்தியா குறித்து இங்கிலாந்தில் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அரசு கூறியதற்கு, “மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல… நான் காந்தி” என ஆவேசமாக ராகுல் காந்தி அளித்த பதில் இந்திய அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் போது கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கடனைக் கட்டாமல் கம்பி நீட்டிய தொழிலதிபர்களான நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோரை சாடும் விதமாக “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பொதுவான குடும்பப்பெயர் எப்படி வந்தது?” என கேள்வி எழுப்பினார்.
ராகுல் காந்தி குறிப்பிட்ட சமூகத்தினரை கொச்சைப்படுத்தியதாக கூறி சர்ச்சைகள் வெடித்த நிலையில், அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கிய சூரத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், அன்றே ஜாமீனும் வழங்கியது.
ஆனால் அனைத்தையும் தவிடு பொடியாக்கும் விதமாக நேற்று மக்களவை செயலகம் ராகுல் காந்தியின் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்தது. இந்த செய்தி ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்திலும் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சியினர் பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தியிடம் இந்தியாவின் ஜனநாயகம் குறித்து இங்கிலாந்தில் பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக கருத்து தெரிவித்துள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, ஜனநாயகம் குறித்து பேசியதற்காகவும், அவதூறு வழக்கு விவகாரத்திலும் மன்னிப்பு கேட்கலாமே என்கின்றனர். ஒருமுறை அல்ல எத்தனை முறை பதவி நீக்கம் செய்தாலும் நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்கப்போவதில்லை. ஏனெனில் மன்னிப்பு கேட்க நான் சாவக்கர் அல்ல, காந்தி… காந்தி ஒருபோதும் மன்னிப்பு கேட்டது இல்லை என ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார்.
Discussion about this post