“வைதீஸ்வரரால் அனுப்பப்பட்ட வைத்தியர்”
சாக்ஷாத் பரமேஸ்வரரே மஹாபெரியவாளெனும் திருஉரு கொண்டு அருள்கிறார் என்ற பூர்ண நம்பிக்கையோடு உலகம் இதை முழுமையாக உணரவில்லையே என்ற ஆதங்கத்துடன் பிறவிப் பயனை அனுபவித்தவர் பிரதோஷம் மாமா .
அவர் உத்யோக பந்தத்தில் இருந்தபோது வெளியூர் செல்ல நேர்ந்தது. மனைவியும் உடல்நிலை சரியில்லாத இரண்டு குழந்தைகளும் எழுமூரில் இருக்க அதில் அருணாசலம் என்ற குழந்தைக்கு திடீரென்று கால் முட்டி இரண்டும் எதிர்ப்புறமாக திரும்பிவிட உயிர்போகும் அவஸ்தையில் குழந்தை துடித்து போனான். அவருக்கு யாரும் துணையில்லாத நிலையில் குழந்தையின் அவஸ்தையைக் கண்டு பதைபதைத்து போனாள். என்ன செய்வதென்று தெரியாத நிலை மாமாவின் துணைவிக்கு.
உடனே வீட்டில் பூஜையறைக்கு ஓடினாள். அங்கே பெரியவாளின் சன்னதியில் குழந்தையை போட்டு உருக்கமாக “பெரியவாதான் காப்பாத்தணும்” என்று வேண்டியபடி கண்ணீர் சிந்தினார்.
அருகில் இருந்தவர்கள் இதை கேட்டு உதவி செய்ய ஓடிவந்தாலும் அவர்கள் செய்த எந்த உபாயமும் பலனளிக்காமல் மிக வேதனையுடன் கதறி அழுதான் அந்த குழந்தை. குழந்தையை புத்தூருக்கு அழைத்துச் செல்லும் சாத்யமில்லை. வீட்டிலிருக்கும் மற்றொரு குழந்தையை பார்த்துக் கொள்ள யாருமில்லாத நிலை.
“புத்தூருக்கு எப்படி குழந்தையை அனுப்பி வைத்தியம் செய்வேன்” என்று மாமி பெரியவாளின் திருஉருவ படத்தின் முன் நின்று முறையிட சர்வவியாபியான அவரின் திருச் செவி அதை கேட்டு ஆறுதல் தர அங்கேயே வந்து நின்றது போலானது.
அப்படி ஒரு ஆறுதலை தரும் செய்தியை விஜிலென்ஸ் கிருஷ்ணமூர்த்தி எனும் அன்பர் கொண்டு வந்தார். “மாமி கவலையே படாதீங்கோ. நீங்க புத்தூர் போகணும்னு அவசியமில்லை. அந்த புத்தூர் டாக்டரே சென்னைக்கு வந்திருக்கார்” என்று ஆச்சர்யமான தகவலை அதே சமயம் சொன்னார்.
முதலில் அவரது இல்லத்திற்க்கே வந்து வைத்தியம் பார்க்க மறுத்து விட்ட டாக்டர் சிறிது நேரத்திற்கு பின் என்ன தோன்றியதோ ஒரு உந்துதலோடு பிரதோஷம் மாமாவின் வீட்டிற்கே வந்து நேரடியாக குழந்தையின் நிலையை கண்டு அதற்கான சிகிச்சை செய்தார். மேலும் சிகிச்சைக்கான பணமும் வாங்க மறுத்துவிட்டார். குழந்தை அதன்பின் சற்றே சகஜநிலையை அடைந்தான்.
இந்த அதிசயம் எப்படி நடந்திருக்கும்? ஏதோ எதேச்சையாக நடந்திருக்கலாமென்று நினைத்துவிட முடியாமல் இது சாக்ஷாத் பரமேஸ்வரரான மஹாபெரியவாளின் லீலை என்பது அதன்பின் நடந்த சம்பவத்தில் உறுதியானது.
இந்த செயல் நடந்து முடிந்த பின் அடுத்த பிரதோஷ தரிசனத்திற்காக பெரியவா அருளிக் கொண்டிருந்த ஹாஸ்பெட் நகருக்கு சென்றார் பிரதோஷம் மாமா. அங்கு கைங்கர்யம் செய்யும் ஏகாம்பரம் என்பவர் மாமாவிடம் சொன்ன தகவல் எல்லாரயும் மெய்சிலிர்க்க வைத்தது.
மஹா பிரபு பெரியவா ஹாஸ்பெட்டில் தங்கியிருந்த சிவன் கோயில் வாசலில் சில நாட்களுக்கு முன் ஒருநாள் இரவு 12 மணிக்கு சம்பந்தமே இல்லாமல் பிரதோஷம் மாமாவின் இரு குழந்தைகளைப் பற்றி அந்த நடுநிசி வேளையில் பேசினாராம். அதாவது குழந்தைகளால் கஷ்டப்படும் பெற்றோர்கள், பெற்றோர்களால் துன்பப்படும் குழந்தைகள் என்று தன் பக்தர்களில் 19 பேர்களைப் பற்றி விரிவாக பேசியபோது இந்த குழந்தைகளின் சிரமங்களையும் விளக்கி கவலைப்படுவதுபோல் தோன்றியதாம்.
வைத்தியநாதனாய் எங்கோ ஹாஸ்பெட்டில் இப்படி குழந்தைகளைப் பற்றி தெய்வம் கவலைப்பட்ட நேரம் சரியாக, இங்கே எழுமூரில் குழந்தை அருணாசலம் வலி தாங்காமல் துடிக்க மாமி பிரபுவின் திருஉருவ பட சன்னதியில் முறையிட்ட அதே நேரம்தான். அதுவும் நடுஇரவு என்பது பேராச்சர்யம்.
இவ்விடத்தில் இல்லாமல் சென்னையில் உருகும் பக்தைக்கு உதவிட சர்வ வியாபியான பெரியவா குழந்தை பற்றி அவரும் கவலைப்பட்டு பேசிக்கொண்டே இருக்கும் போது புத்தூர் டாக்டரை அங்கே அனுப்பிய பெருங்கருணையை எப்படி வியப்பது?
பக்த பராதீனனாக காப்பாற்றி அருளும் கண்கண்ட காருண்ய தெய்வத்தை கண்ணீர் மல்க சரணாகதம் செய்தார் பிரம்ம ஸ்ரீ பிரதோஷம் மாமா.
WRITTENS 300+
STORY 50 +
VISUAL EDITOR IN MADHIMUGAM