இனி கட்சி தாவினால்.., – கடிவாளம் போட்ட காங்கிரஸ் அரசு!
ஒரு கட்சியின் சின்னத்தின் மூலம் தேர்தலை சந்திக்கும் சில வேட்பாளர்கள், குதிரை பேரத்தின் மூலம், வேறு கட்சிக்கு தாவிவிடுகின்றனர். இவ்வாறு செய்வது, வாக்கு செலுத்தி அவர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு செய்யும் துரோகம் என்று அரசியல் விமர்சகர்கள் பலர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இவ்வாறு கட்சித் தாவும் எம்.எல்.ஏ-க்களுக்கு கடிவாளம் போடும் வகையில், புதிய மசோதாவை, ஹிமாச்சல பிரதேச அரசு கொண்டு வந்துள்ளது. அதாவது, ஹிமாச்சல பிரதேசத்தின் சட்டமன்றத்தில், நேற்று கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களுக்கு, ஓய்வூதியம் வழங்கப்படமாட்டாது என்று புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஒரு குறிப்பிட்ட கட்சியின் மூலம் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்ற எம்.எல்.ஏ, வேறு கட்சிக்கு சென்றால், அவர் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்படுவார். மேலும், வேறு ஏதேனும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருந்தால், அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
இவ்வாறு பல்வேறு காரணங்களுக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு, ஓய்வூதியம் வழங்கப்படாது என்று புதிய மசோதாவில் கூறப்பட்டுள்ளது. குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு, எதிர்கட்சியான பாஜக கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. இது ஒரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்றும் விமர்சித்து வருகிறது.