சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக அவரது மகளின் லால் சலாம் படத்தில் நடிக்கிறார். அதை தொடர்ந்து அவர் அடுத்ததாக டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க இருந்தார். இந்நிலையில் ரஜினி அந்த படத்தில் இயக்குனரை மாற்றி வேறொரு இயக்குனரை நியமித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி பிறந்தநாளன்று அந்த படத்தின் அறிமுக காட்சி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அடுத்ததாக அவர் லைக்கா தயாரிப்பில் அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் டான் பட இயக்குனரான இளம் இயக்குனர் சிபி சக்கரவர்த்தியுடன் ஒரு படத்தில் நடிக்க இருந்தார்.
இந்நிலையில் சிபி சக்கரவர்த்தியின் கதையில் ரஜினிக்கு முழு உடன்பாடு இல்லாததால் அவரை மாற்றிவிட்டு அந்த இடத்தில கோமாளி மற்றும் லவ் டுடே படத்தின் இயக்குனரான பிரதீப் ரங்கநாதனை அவரின் அடுத்த பட இயக்குனராக நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லவ் டுடே படத்தின் வெற்றியால் பிரதீப்பை நேரில் அழைத்து ரஜினி வாழ்த்து கூறியதும் குறிப்பிடத்தக்கது.