ஆர்.எஸ்.எஸ் தரப்பில் நோட்டீஸ்..! உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு..?
ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த காவல்துறை அனுமதி வழங்காத நிலையில், உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்ட 4 அதிகாரிகளுக்கு ஆர்.எஸ்.எஸ் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அக்டோபர் 22 மற்றும் 29-ம் தேதிகளில் தமிழ்நாட்டின் 33 இடங்களில் பேரணி நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதனை விசாரித்த நீதிமன்றம், மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் மருது சகோதரர்கள் குருபூஜை மற்றும் தேவர் குருபூஜை நடைபெற உள்ளதால் இந்த மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பேரணி நடத்திக் கொள்ளலாம் என்று அனுமதி அளித்தது.
மேலும், பட்டாசுகள் வெடிக்க கூடாது, ஊர்வலத்தில் 500 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதித்தது.
இந்நிலையில், உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தும், நீலகிரி மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இதனால் உள்துறை செயலாளர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால், நீலகிரி மாவட்ட எஸ்.பி. சுந்தர வடிவேல், எருமாடு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கர் ஆகியோருக்கு ஆர்.எஸ்.எஸ் தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தபோது, அரசு தரப்பு வழக்கறிஞர்களும் இருந்த நிலையில், டிஜிபி இதனை கவனத்தில் கொள்ளாதது நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் என்றும், உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்கும் வகையில் அனுமதி அளிக்க வேண்டும் என்றும், தவறினால் நால்வருக்கு எதிராகவும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post