நவராத்திரி வரலாறு..!! நவராத்திரி இரவில் கொண்டாடவது ஏன்..? கொலு பொம்மை வைக்க காரணம்..?
இன்று நவராத்திரி தொடங்கி இரண்டாவது நாள்., நவராத்திரி என்றாலே மிகவும் விசேஷம் என சொல்லலாம் அப்படியாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பை பற்றி நவராத்திரி கூறுகிறது.. நவராத்திரி பிறந்ததன் புராண கதைகள் பற்றி முதலில் தெரிந்துக்கொள்ளலாம்..
ஆதிபராசக்தியின் ஒன்பது அவதாரங்கள் :
மகேஸ்வரி, கௌமாரி, வராகி, மகாலெட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி என பலவகை ரூபங்கள் எடுத்தாலும் அடிப்படை ஆதார சக்தி ஒன்றே. இந்த தெய்வங்கள் அனைத்தையும் நம் வீட்டிற்கே வரவழைத்து போற்றி வணங்கி வழிபடும் விழாவே நவராத்திரி.
பலநூறு ஆண்டுகளுக்கு முன் சும்பன், நிசும்பன் என இரண்டு அசுரன்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.. இந்த அரக்கன்கள் தெய்வங்களிடம் எந்த ஆணும்., அரசனும் அளிக்க முடியாத அளவிற்கு சக்தி வேண்டும் என்று வரத்தை பெற்றுள்ளனர்..
தங்களை அழிக்க யாரும் இல்லை என்ற ஆணவத்தில் அந்த அரக்கன்கள் கொடுரமாக மற்றவர்களை துன்புறுத்துவது போன்ற செயலில் ஈடுபட்டு மிகவும் தலைக்கனத்தோடு செயல் பட்டுள்ளார்கள்..
இந்த அசுரன்களின் ஆட்சிக்காலத்தில் மக்கள் மிகவும் அல்லலுற்றனர். தவசீலர்களால் வேள்விகளைச் செய்ய முடியவில்லை. அனைவரும் இந்த இரு அரக்கர்களையும் கண்டு அஞ்சி நடுங்கினர். இப்படியே தொடர்ந்தால் பூமி தாங்காது., மக்களை காப்பாற்ற வேண்டியது நமது கடமை என எண்ணிய தேவர்கள், மஹா விஷ்ணுவிடமும், சிவனிடமும் முறையிட்டனர். அவர்கள் பிரம்மனையும் சேர்த்துக் கொண்டு, என்ன செய்வது என ஆலோசித்தனர்.
ஆண்கள் யாராலும் அந்த இரு அசுரர்களையும் வெல்ல முடியாது என்பது வரம். அதனால் தேவர்களும் மூவர்களும் அன்னை ஆதி சக்தியை நோக்கிப் பிரார்த்தனை செய்தனர்.
மக்களின் துன்பம் கண்டு மனமுருகிய ஆதிபராசக்தி அழகான மங்கையின் வடிவம் கொண்டு பூமிக்கு வந்தாள். அவளுடைய அழகுக்கு யாரும் நிகர் இல்லை என விளங்கினாள். பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து அன்னைக்கு கொடுத்து விடுகிறார்கள்.
இதனால் சிவன்., பிரம்மா, விஷ்ணு மற்றும் தேவர்கள், என அனைவரும் சிலையாக ஆனார்கள். அதே போல இந்திரனும் திக்குப் பாலர்களும் தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் அளித்துவிட்டு சிலையாக நின்றார்கள்.
அன்னையின் அந்த ஆயுதங்களை பத்துக் கரங்களில் தாங்கி, போர்க்கோலம் கொண்டு அரக்கன் களையும், நிசும்பர்களையும், அவர்களுக்கு படைத்தளபதியான மது, கைடபன், ரக்தபீஜனையும் என அனைவரையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள். இந்த தர்ம யுத்தத்தின் போது அவர்கள் சிலையாக நின்றதால் தான் அதைக் குறிக்கும் வகையில் பொம்மைக் கொலு வைக்கும் பழக்கம் வந்தது.
இந்த தர்மயுததமானது தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெற்றது., அப்படி நடந்ததால் தான் தொடர்ந்து ஒன்பது நாட்கள் நவராத்திரி கொண்டாடப்படுகிறது..
அந்த காலத்தில் எல்லாம் போரானது காலை முதல் மாலைக்குள் மட்டுமே நடைபெறுமாம்., மாலைக்கு பின் கூடாரங்கள் அமைத்து., போரின் களைப்பு தெரியாமல் இருக்க ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இது ஒன்பது இரவுகள் நடந்தது. அதனாலேயே நாம் நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்.
நம் வாழ்வின் இன்னல்களை நீக்கி, தேவியின் இன்னருளைப் பெற்றுத் தரும் வழிபாட்டு நியதிகளை சொல்லித் தருகிறது நவராத்திரி. நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவில் அம்பாளை தியானித்து, பூஜித்து வழிபட வேண்டும்.
நவராத்ரி வ்ரதப் பூமௌ குருதேயோ நரோத்தம
தஸ்ய புண்ய பலம் வக்தும் ஸக்தா ஸா பரமேஸ்வரீ.