ரஷ்ய-உக்ரைன் போரில் கொல்லப்பட்ட கர்நாடக மாணவர் நவீன் இன்று காலை இந்தியா வந்தடைந்தது. அவரது உடலுக்கு கர்நாடக முதல்வர் நேரில் அஞ்சலி செலுத்தின்னார்.
கடந்த 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தனது கொடூர தாக்குதலை தொடங்கியது. இன்றுடன் கடந்த 26 நாட்களுக்கு மேலாக தீவிர தாக்குதல்கள் மூலம் உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. எனினும்,ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இதற்கிடையில்,கடந்த 1 ஆம் தேதி உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் மாணவர் நவீன் சேகரப்பா என்பவர் உயிரிழந்தார்.
இந்நிலையில்,நவீனின் உடலை ஏற்றி வந்த விமானம் இன்று(மார்ச்.21)அதிகாலை 3 மணிக்கு பெங்களூரு விமான நிலையத்துக்கு வந்தது. பெங்களூரு வந்த நவீன் உடலுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர், உக்ரைனில் கொல்லப்பட்ட நவீன் சேகரப்பா ஞானகோதரின் உடலை நாட்டுக்கு கொண்டு வந்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களை நாம் சண்டையில் இழந்தது வருத்தமளிக்கிறது. நவீன் குடும்பத்திற்கு கர்நாடக முதல்வர் ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
இதையடுத்து, பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து ஹாவேரி மாவட்டத்தில் உள்ள கிராமத்திற்கு நவீனின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு குடும்ப வழக்கப்படி இறுதிச்சடங்கு நடத்தப்படும்.
அதன்பின்னர் நவீனின் உடல் தாவண்கெரே எஸ்.எஸ். மருத்துவ ஆராய்ச்சி கல்வி நிறுவனத்திற்கு மருத்துவ ஆராய்ச்சிக்காக வழங்கப்படும் என்றும் அவரது தந்தை ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.