மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
தமிழக சட்டசபையில் இன்று(மார்ச்.21) பட்ஜெட் மீதான விவாதம் தொடங்குகியது. சட்டப்பேரவையில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
இதையடுத்து, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனி தீர்மானத்தை முன்மொழிந்தார்.
இது குறித்து பேசிய அவர், காவிரி பிரச்சினை மகன், பேரன், கொள்ளுப்பேரன் வரை போகுமோ என்ற சந்தேகம் நிலவுகிறது.
கர்நாடகாவில் எந்த கட்சியாக இருந்தாலும் ஒரே அணியாக உள்ளனர்.அதிமுக தீர்மானம் கொண்டு வந்தபோது எல்லாம் திமுக ஆதரித்தது. திமுகவுக்கும் அதிமுக ஆதரவு அளித்தது. காவிரி பிரச்சினையில் நான் என்ன செய்தேன், நீ என்ன செய்தாய் என்ற வாதத்தை விட்டு விடுவோம்.
உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு தண்ணீர் தரவேண்டும் என தீர்ப்பு வழங்கிய பிறகும் கர்நாடகா அணைகட்ட முயற்சிக்கிறது. உச்சநீதிமன்றம் சொன்னதைக் கூட ஒரு மாநில அரசு கேட்க மறுப்பது கூட்டாட்சித்தத்துவத்திற்கு எதிரானது. தமிழகம் தண்ணீருக்கு கையேந்தும் நிலையில் உள்ளது. நாம் அணை கட்ட அனுமதித்தால் வருங்கால சந்ததியினர் நம்மை மன்னிக்க மாட்டார்கள்.
அண்டை மாநிலத்துடன் நல்லுறவு பேணும் அதே நேரத்தில் விட்டுக்கொடுக்கக் கூடாது. மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறார்கள். தமிழ்நாடு சட்டப்பேரவை கர்நாடக அரசின் செயலுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்கிறது. மேகதாதுவில் அணை கட்ட எந்தவித அனுமதியும் மத்திய அரசு கொடுக்கக் கூடாது, என தெரிவித்துள்ளார்.