நேட்டோ அமைப்பில் உறுப்பினராக தொடர்ந்து வலியுறுத்த மாட்டேன் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திடீரென அறிவித்துள்ளார்.
கடந்த 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தனது கொடூர தாக்குதலை தொடங்கியது. கடந்த 14 நாட்களுக்கு மேலாக தீவிர தாக்குதல்கள் மூலம் உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றியது. எனினும்,ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், நேட்டோ அமைப்பில் உறுப்பினராக தொடர்ந்து வலியுறுத்த மாட்டேன் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திடீரென அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “உக்ரைனை நேட்டோவில் இணைத்துக் கொள்ள ஏற்கனவே அந்த அமைப்பில் உள்ள நாடுகள் முனைப்பு காட்டவில்லை என்பதை நான் புரிந்து கொண்டேன்.
ரஷ்யாவுடனான போர் மற்றும் சர்ச்சைகளை கருத்தில் கொண்டே உக்ரைனை தங்களது அமைப்பில் இணைத்து கொள்வதற்கு நேட்டோ அஞ்சுகிறது.எனவே,நேட்டோ அமைப்பில் சேர்த்துக்கொள்ளும்படி இனி வற்புறுத்த மாட்டோம்.மேலும்,எதையும் காலில் விழுந்து கெஞ்சி பெரும் நாடாக உக்ரைன் இருக்காது.
அதே சமயம்,இந்த போரில் உக்ரைன் மக்கள் ரஷ்யாவிடம் சரணடையவும் தயாராக இல்லை.எங்கள் மண்ணை விட்டுக் கொடுக்க மாட்டோம்.இறுதி வரை நாங்கள் போராடுவோம்.
ரஷ்யாவால் சுதந்திர பகுதிகளாக அங்கீகரிக்கப்பட்ட கிரீமியா,டான்பாசின் உள்ள மக்கள் எப்படி வாழப் போகிறார்கள்,அவர்களின் எதிர்காலம் தொடர்பாக ரஷ்யா அதிபர் புடினுடன் விவாதிக்க தயார்” என தெரிவித்துள்ளார்.