தேசிய அளவிலான சப் ஜூனியர் சாப்ட் டென்னிஸ் போட்டி..!! தமிழக மாணவி சாதனை..!!
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடைபெற்று வரும் 18 வது தேசிய அளவிலான சப் ஜூனியர் சாப்ட் டென்னிஸ் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த தனிகா தாயுமானவன் என்ற மாணவி தங்கப் பதக்கம் வென்று சாதனை..
சேலம் மாவட்டம், ஓமலூர் பேரூராட்சி பகுதியில் உள்ள தனியார் சாப்ட் டென்னிஸ் அகாடமி மைதானத்தில் பயிற்சி பெற்ற தனிகா தாயுமானவன் என்ற மாணவி பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடைபெற்றுவரும் 18வது தேசிய அளவிலான சாப்ட் டென்னிஸ் போட்டிக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு சாப்ட் டென்னிஸ் சங்கத்தின் மூலம் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதையடுத்து நேற்று இரவு நடைபெற்ற பெண்கள் தனி நபர் பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த மஹெக் என்ற மாணவியை தோற்கடித்து முதலிடம் பிடித்து தங்க பதக்கத்தை வென்றுள்ளார்.
தேசிய அளவில் நடைபெற்ற சாப்ட் டென்னிஸ் போட்டியில் தனிநபர் பிரிவில் முதலிடம் பிடித்து தங்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சருக்கும் பெருமை சேர்த்த தனிகாவிற்கு பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் ஓமலூர் பகுதி வாழ் மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.