அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா நிலவுக்கு 1969ஆம் ஆண்டில் தான் முதன்முறையாக மனிதர்களை அனுப்பி உலக வரலாற்றில் சரித்திரம் படைத்தது.
தற்போது மீண்டும் நாசா மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் திட்டத்தை தொடங்கியுள்ளது. 2025-க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா தற்போது ஆர்ட்டெமிஸ் 1 ராக்கெட்டை நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக அனுப்ப உள்ளது.
இந்த வகை ராக்கெட் ஆராய்ச்சிக்கான ஓரியன் விண்கலத்தை கொண்டு செல்கிறது. இன்று கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து இந்த விண்கலம் புறப்படுகிறது.
இன்று ஆக.29 இந்திய நேரப்படி மாலை 6 மணியளவில் ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்ப பணி தொடங்க திட்டப்பிடப்பட்டுள்ளது.
ஆர்ட்டெமிஸ் 1, 42 நாள்களில் சுமார் 1.3 மில்லியன் மைல்கல் பயணிக்கும். நிலவின் மேற்பரப்பில் இருந்து 60 மைல்களுக்கு அருகில் ஓரியன் விண்கலத்தை பறக்க நாசா திட்டமிட்டுள்ளது.
மேலும் விண்கலம் பூமிக்கு திரும்புவதற்கு, நிலவின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி ஓரியன் விண்கலம் திரும்பும். கலிபோர்னியாவின் சான் டியோகோ கடற்கரையில் பசிபிக் பெருங்கடலில் ஓரியன் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.