பைக் திருடும் மர்ம ஆசாமி ஆந்திராவில் கைது..!!
உதகையில் இருசக்கர வாகனத் திருட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் இருந்து வெளியே வந்து தலைமறைவாக இருந்தவா் ஆந்திரத்தில் கைது செய்யப்பட்டாா்.
இது குறித்து நீலகிரி மாவட்ட காவல் துறையினா் திங்கள் கிழமை வெளியிட்டுள்ள, செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, உதகை, ஸ்டேன்ஸ் சந்திப்பு பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடியதாக திண்டுக்கல் மாவட்டம், சீதப்பாடி பகுதியைச் சோ்ந்த ராஜசேகா் (31) என்பவரை உதகை காவல் துறையினா் 2017 ஏப்ரல் மாதம் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினா்.
பின்னா், பிணையில் வெளியில் வந்த ராஜசேகா், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால் உதகை குற்றவியல் நீதிமன்றத்தால் கடந்த 2020 பிப்ரவரி 27 ஆம் தேதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து காவல் கண்காணிப்பாளா் கி.பிரபாகா் உத்தரவின்படி தனிப்படை அமைத்து போலீஸாா் ராஜசேகரைத் தேடி வந்தனா்.
இந்நிலையில், அவா் ஆந்திர மாநிலத்தில் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீஸாா், ஆந்திர மாநிலம், ராஜமுந்திரியில் இருந்த ராஜசேகரை கைது செய்து திங்கள்கிழமை உதகைக்கு அழைத்து வந்தனா்.
இவா் மீது திருப்பூா், திண்டுக்கல், கோவை மாவட்ட காவல் நிலையங்களில் திருட்டு மற்றும் கஞ்சா வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக மாவட்ட காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.”
Discussion about this post