குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு காளிவேடம் அணியும் பக்தர்கள் மாலை அணிந்து 60 நாள் விரதம் தொடங்கினர்.
இந்த திருவிழாவில் பக்தர்கள் காளி, அம்மன், சிவன், கிருஷ்ணா், முருகன், விநாயகர் போன்ற சாமி வேடங்கள் மற்றும் குறவன், குறத்தி, போலீஸ், குரங்கு, கரடி, சிங்கம், புலி போன்ற பல்வேறு வேடங்கள் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இதில் காளி வேடம் அணியும் பக்தர்கள் 60 நாட்களும், மற்ற வேடம் அணியும் பக்தர்கள் 40 நாள், 20 நாள் என விரதம் இருப்பார்கள்.
இந்த நிலையில் காளி வேடம் அணியும் பக்தர்கள் நேற்று காலையில் கடலில் புனித நீராடி சிவப்பு ஆடை அணிந்து முத்தாரம்மன் கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தினர். பின்னர் பூசாரி குமார் பட்டரிடம் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். இந்த பக்தர்கள் அந்தந்த ஊர்களில் தனி குடிசை அமைத்து முத்தாரம்மன் படம் மற்றும் காளி வேடம் அணியும் கிரீடம், சடை முடி, சூலாயுதம், வீர பல், கண்மலர் போன்றவற்றை வைத்து காலை, மாலையில் பூஜை செய்து வருவார்கள்.