மூன்று பேர் கொலை.. காரணத்தை சொன்ன குற்றவாளி.. திடுக்கிடும் தகவல்..!
கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே உள்ள காராமணிக்குப்பம் ராஜாராம் நகரை சோ்ந்தவா் சுரேஷ்குமாா் ( 70), ஓய்வுபெற்ற மருந்தாளுநா். இவரது மனைவி கமலேஸ்வரி (60). இவா்களது மகன் சுதன்குமாா் (40, பேரன் நிஷாந்த் (10).
சுதன்குமாரின் மனைவி கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுரேஷ்குமாரும், உடல் நலக் குறைவால் இறந்துவிட்டாா். எனவே, வீட்டில் கமலேஸ்வரி, சுதன்குமாா் மற்றும் நிஷாந்த் மட்டும் வசித்து வந்தனா்.
இவா்களது வீட்டிலிருந்து கடந்த திங்கள்கிழமை காலை துா்நாற்றம் வீசியதுடன், புகை வந்ததாக அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனா்.
அப்போது, எரிந்த நிலையில் கமலேஸ்வரி, சுதன்குமாா், நிஷாந்த் ஆகியோா் இறந்து கிடந்தனா். இதையடுத்து, 3 பேரின் சடலங்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.ராஜாராம் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்.
முதலில் இது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அவர்களது உடல்களில் பல இடங்களில் வெட்டப்பட்ட காயங்கள் இருந்ததையடுத்து, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தது.
இதனை தொடர்ந்து, கொலையாளிகள் யார்? கொலைக்கான நோக்கம் குறித்தும் போலீசார் விசாரித்து வந்த நிலையி்ல் இது தொடர்பாக சாகுல் அமீது, சங்கர் ஆனந்த் என்ற இரண்டு இளைஞர்களை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தனது தாயின் தற்கொலைக்கு சுதன்குமார் தான் காரணம் என்பதால் கொலை செய்ததாக தகவல் கிடைத்துள்ளது.
பின்னர் அவர்களிடம் இந்த கொலையில் வேறு யாரேனும் உடந்தையாக இருந்தார்களா என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்