கோமாளியை ரசிக்கலாம் ஆனால் கோமாளி கையில் ஆட்சியை கொடுத்தால் மன்றமே சர்க்கஸ் கூடாரமாக மாறிவிடும் என்பதற்கு தற்போது நடப்பதே உதாரணம் – நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன்
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தி.மு.க தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. லீக் முறையில் நடைபெற்ற போட்டியில், ஆண்கள் பிரிவில் ஜமால் முஹம்மது கல்லூரி அணி முதலிடமும், தமிழ்நாடு காவல் துறை அணி 2வது இடத்தையும் வென்றது. அதே போல பெண்கள் பிரிவில் தமிழ்நாடு காவல் துறை அணி முதலிடமும், ஜமால் முகமது கல்லூரி அணி 2வது இடத்தையும் வென்றது.வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பை, பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் ஆகியோர் வழங்கி பாராட்டினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன்
அவசர கதியில் பாராளுமன்றத்தை கூட்டுகிறார்கள். ஆகஸ்ட் மாதத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவே இல்லை. மணிப்பூர் விவகாரம் குறித்து பேச மறுக்கிறார். வெளி நாடுகளுக்கு செல்லும் பிரதமர் இதுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை. பாராளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டும் போது எதற்காக அது கூட்டப்படுகிறது என்பதை தெரிவிக்க வேண்டும் ஆனால் இதுவரை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. சிறப்பு கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது என்கிறார்கள் அதுவும் ஏன் என தெரியவில்லை.
ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்துள்ளார்கள். அந்த குழுவில் தென்னிந்தியாவை சேர்ந்த எந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் இல்லை அதே போல தேர்தல் ஆணையத்தை சேர்ந்த அதிகாரிகள் யாரும் இல்லை. முதல் முறையாக பதவியிலிருந்து சென்ற குடியரசு தலைவரை ஒரு குழுவின் தலைவராக நியமித்துள்ளார்கள் அதுவும் ஏன் என தெரியவில்லை.
கோமாளியை ரசிக்கலாம் ஆனால் கோமாளி கையில் ஆட்சியை கொடுத்தால் மன்றமே சர்க்கஸ் கூடாரமாக மாறிவிடும் என்பதற்கு தற்போது நடப்பதே உதாரணம்.
மோடியின் கூட்டணியில் சி.பி.ஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை தான் இருக்கிறார்கள். ஆனால் இந்தியா கூட்டணி மக்கள் கூட்டணி. நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஆகிய மூன்றிலும் தோல்வி அடைந்ததால் கஷ்டமாக இருக்கிறது என ஒரே முறை தோல்வி அடைந்து விடலாம் என்பதற்காக தான் ஒரே நாடு, ஒரே தேர்தலை அ.தி.மு.க தற்போது ஆதரிக்கிறது என உதயநிதி தெரிவித்துள்ளார். அதையே நானும் தெரிவிக்கிறேன்.
சி.ஏ.ஜி ஊழல் மிகப்பெரிய ஊழல் அதை மூடி மறைக்க பார்க்கிறார்கள். அதே போல அதானி பிரச்சனை இது போன்ற பிரச்சனைகளை திசை திருப்ப அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். நாட்டில் முக்கிய பிரச்சனை இருக்கும் போது மக்களை அதிலிருந்து திசை திருப்பி தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி அவர்களின் தவறை மறைப்பது தான் மோடியின் வேலை.
2024 ல் இந்தியா கூட்டணி வெற்றி பெற்ற உடன் நீட்டிற்கு விதி விலக்கை கொண்டு வருவோம் என தெரிவித்தார்.