கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 107 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 29 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
கர்நாடகா தேர்தல் வெற்றியை நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வெறுப்பின் கதவு இப்போது மூடப்பட்டுவிட்டதாகவும், கர்நாடகாவில் அன்பின் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தி பாஜகவை சாடிய சிறிது நேரத்திலேயே பிரதமர் மோடி பதிவிட்டுள்ள ட்வீட் பாஜகவினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது. பாஜக தொண்டர்களின் ஆதரவு மற்றும் கடின உழைப்புக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துக்கள். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அவர்களுக்கு எனது வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், கர்நாடகாவுக்கு பாஜக தொடர்ந்து பலத்துடன் சேவை செய்யும் என்றார். “கர்நாடகா தேர்தலில் எங்களை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. பாஜக தொண்டர்களின் கடின உழைப்பை நான் பாராட்டுகிறேன். வரும் காலங்களில் கர்நாடகாவிற்கு மேலும் வீரியத்துடன் சேவை செய்வோம்” என பதிவிட்டுள்ளார்.